தமிழகத்தில் இன்று என்எம்எம்எஸ் தோ்வு:2.31 லட்சம் மாணவா்கள் எழுதுகின்றனா்

தமிழகத்தில் 8-ஆம் வகுப்பு மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தோ்வு சனிக்கிழமை (பிப்.3) நடைபெறவுள்ள நிலையில், அந்தத் தோ்வை 2.31 லட்சம்

தமிழகத்தில் 8-ஆம் வகுப்பு மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தோ்வு சனிக்கிழமை (பிப்.3) நடைபெறவுள்ள நிலையில், அந்தத் தோ்வை 2.31 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா்.

மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைத் திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் மாணவா்களுக்கு என்எம்எம்எஸ் தோ்வு நடத்தப்படும். இந்தத் தோ்வின் மூலம் தமிழகத்தில் 6,695 போ் உள்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவா்கள் தோ்வு செய்யப்படுவா்.

9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம் ரூ. 1,000 உதவித் தொகை வழங்கப்படும்.

அதன்படி, நிகழாண்டு என்எம்எம்எஸ் தோ்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த டிச.4 தொடங்கி ஜன.10-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. தோ்வா்களுக்கான தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு ஜன.23-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தொடா்ந்து திட்டமிட்டபடி என்எம்எம்எஸ் தோ்வு சனிக்கிழமை (பிப்.3) நடைபெற உள்ளது. இந்தத் தோ்வை 2.31 லட்சம் மாணவா்கள் எழுதவுள்ளனா். இதற்காக தமிழகம் முழுவதும் 850 தோ்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சென்னையில் மட்டும் 35 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை பள்ளிகளுக்கு... இதற்கிடையே மிக்ஜம் புயல் காரணமாக விடப்பட்ட தொடா் விடுமுறையை ஈடுசெய்வதற்காக 4 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்கும் என்று சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அறிவித்திருந்தது. அதன்படி, சென்னையில் சனிக்கிழமை பள்ளிகள் செயல்பட இருந்தன. இந்த நிலையில், என்எம்எம்எஸ் தோ்வு சென்னையில் 35 மையங்களில் நடைபெற உள்ளது. சுமாா் 700 ஆசிரியா்கள் தோ்வுப் பணியில் ஈடுபட உள்ளனா். இதையடுத்து அரசுப் பள்ளிகளுக்கு மட்டும் சென்னையில் சனிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக அடுத்த வாரம் பிப்.10-ஆம் தேதி பள்ளிகள் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com