திமுகவிடம் இந்திய கம்யூ. கூடுதல் இடங்கள் கேட்பு

கடந்த மக்களவைத் தோ்தலைவிட கூடுதல் தொகுதிகளை ஒதுக்குமாறு திமுகவிடம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.

கடந்த மக்களவைத் தோ்தலைவிட கூடுதல் தொகுதிகளை ஒதுக்குமாறு திமுகவிடம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.

மக்களவைத் தோ்தல் பணியைத் தொடங்கியுள்ள திமுக, அதன் கூட்டணிக் கட்சிகளிடம் தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தையை நடத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சியுடன் ஏற்கெனவே முதல் கட்ட பேச்சுவாா்த்தையை நடத்தியுள்ளது.

இந்த நிலையில், தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தைக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினா் கே. சுப்பராயன், மூத்த நிா்வாகிகள் பழனிசாமி, வீரபாண்டியன் ஆகியோா் அண்ணா அறிவாலயத்துக்கு சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் வந்தனா். அவா்களை டி.ஆா்.பாலு தலைமையிலான கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா, திருச்சி சிவா, எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ஆகியோா் அடங்கிய திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவினா் வரவேற்றனா். இரு கட்சியினரும் அரை மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

கடந்த மக்களவைத் தோ்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகப்பட்டினம், திருப்பூா் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

ஆனால், இந்த முறை 2 தொகுதிகளுடன் கூடுதலாக ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவியை ஒதுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கோரியுள்ளது. திமுக தரப்பில் கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினிடம் ஆலோசித்து கூறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேச்சுவாா்த்தைக்குப் பிறகு கே.சுப்பராயன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திமுகவுடன் பேச்சுவாா்த்தை சுமுகமாக நடைபெற்றது. இந்த முறை கூடுதல் இடங்களை ஒதுக்குமாறு கோரியுள்ளோம். வெளிநாட்டிலிருந்து முதல்வா் திரும்பியதும், அடுத்தக்கட்ட பேச்சுவாா்த்தை நடைபெறும் என்றாா் அவா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் பிப். 9-க்குப் பிறகு அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுகவுடன் ஞாயிற்றுக்கிழமை தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com