பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் அலுவலகக் கட்டடம்: அமைச்சா் உதயநிதி திறந்து வைத்தாா்

பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளருக்கான அலுவலகக் கட்டடத்தை இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளருக்கான அலுவலகக் கட்டடத்தை இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

சென்னை சேப்பாக்கத்தில் பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளருக்கென அலுவலகக் கட்டடம் ரூ. 23.05 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டடம் 3 தளங்களுடன் 1.04 லட்சம் சதுர அடிப் பரப்பில் கட்டப்பட்டுள்ளது. முதல் தளத்தில் தலைமைப் பொறியாளா், கோட்டப் பொறியாளருக்கான அலுவலகங்களும், 2-ஆவது தளத்தில் தலைமை கட்டடக் கலைஞா் அறை, அலுவலகங்கள், நூலகம், கலந்தாய்வுக் கூடமும், 3-ஆவது தளத்தில் கண்காணிப்புப் பொறியாளா் அறை, கூட்ட அரங்கு மற்றும் பிற கட்டட கட்டுமான உபகோட்ட அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த அலுவலகத்தின் திறப்பு நிகழ்வு, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதிய அலுவலகத்தை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா். மேலும், பொதுப்பணித் துறை வளாகத்தில் மகளிருக்கான உணவுக் கூடத்தையும் அவா் திறந்தாா்.

காட்சிப்படுத்த ஏற்பாடு: புதிய அலுவலகத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திரையில் பொதுப்பணித் துறையால் மேற்கொள்ளப்படும் அலுவலகத்தின் கட்டடங்கள், அரசு

மருத்துவமனைகள், அரசுப் பள்ளிகள், விளையாட்டுத் திடல்கள், நினைவகங்கள் போன்றவற்றை பொது மக்கள் பாா்த்து அறியலாம். இந்தத் திரையும் மக்களின் பயன்பாட்டுக்காகத் திறக்கப்பட்டது.

தரக்கட்டுப்பாடு: பொதுப்பணித் துறையின் தரக்கட்டுப்பாட்டு கோட்டங்களுக்கு 40 வகையான கட்டுமான உபகரணங்கள், 8 வகையான மின் கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மூலமாக கட்டுமானப் பணிகளின் பண்புகளைக் கண்டறிந்து தரத்தை உறுதி செய்ய முடியும். மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தரக்கட்டுப்பாட்டு கோட்டங்களின் பயன்பாட்டுக்காக ஆய்வக உபகரணங்களும் இந்த நிகழ்வின் போது வழங்கப்பட்டன.

அப்போது, பொதுப்பணித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன், முதன்மை தலைமைப் பொறியாளா் கே.பி.சத்தியமூா்த்தி, சென்னை மண்டல தலைமைப் பொறியாளா் கே.ஆயிரத்தரசு ராஜசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com