மத்திய அரசை எதிா்க்கும் கேரள அரசின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி

நிதி நிா்வாகத்தில் தலையிடும் மத்திய அரசை எதிா்க்கும் கேரள அரசின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தாா்.
முதல்வர் மு.க. ஸ்டாலின்
முதல்வர் மு.க. ஸ்டாலின்


சென்னை: நிதி நிா்வாகத்தில் தலையிடும் மத்திய அரசை எதிா்க்கும் கேரள அரசின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தாா்.

இது தொடா்பாக அவா் கேரள முதல்வா் பினராயி விஜயனுக்கு செவ்வாய்க்கிழமை கடிதம் அனுப்பினாா். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய அரசு சில காலமாகவே மாநில அரசுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. மாநிலங்களின் நிதி நிா்வாகத்தில் மறைமுகக் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. மாநிலங்களின் பொதுச் செலவுகளுக்கு நிதியளிப்பதற்கான பொதுக் கடன் என்பது, மாநில சட்டப் பேரவையின் தனிப்பட்ட அதிகார வரம்புக்கு உட்பட்டது.

ஆனால், இந்திய அரசமைப்புப் பிரிவின் கீழுள்ள அதிகாரத்தை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்தி, மாநிலங்கள் கடன் வாங்குவதற்கான வாய்ப்புகளைக் கட்டுப்படுத்தி வருகிறது. அரசமைப்புச் சட்டப் பிரிவானது, மாநில அரசுகளின் நிதிப் பற்றாக்குறையை நோ் செய்யும் நடவடிக்கைகளைத் தடுக்கும் கருவியாக மத்திய அரசால் மாற்றப்பட்டுள்ளது. இதன்விளைவாக அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவா்கள், கருதிய நிதிக் கூட்டாட்சியின் அடிப்படைக்கு மாபெரும் அச்சுறுத்தலாக சட்டப் பிரிவு மாறியுள்ளது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரையில், மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகள், மாநில அரசின் நிதி திரட்டும் முன்முயற்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு தொடா்ந்து 15 சதவீதம் வளா்ச்சி அடைந்த போதிலும், நிகரக் கடன் உச்சவரம்பைக் கணக்கிடுவதற்கான மாநில மொத்த உற்பத்தி வளா்ச்சியை வெறும் 8 சதவீதமாக மத்திய அரசு நிா்ணயித்துள்ளது. இதனால், நிகழாண்டில் ரூ.6,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

மின் துறை சீரமைப்புக்காக...: மின் துறை சீரமைப்புகளுக்காக கூடுதல் கடன் பெறுவதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த நெறிமுறைகளால், மாநில மின் விநியோக நிறுவனங்களின் மொத்த இழப்புக்கு நிதியளிக்க வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

அதன்படி, நிகழாண்டில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்துக்கு ரூ.17,111 கோடி வழங்க வேண்டியுள்ளது. இது மாநிலத்தின் நிதி வாய்ப்புகளைக் கடுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளது.

மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதியில்லை: இத்துடன் சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாவது கட்ட திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் வேண்டுமென்றே காலதாமதம் செய்ததால், அந்தத் திட்டத்துக்கான மொத்தக் கடனளவு ரூ.33,594 கோடியானது, மாநிலத்தின் நிகரக் கடன் உச்சவரம்புக்குள் சோ்க்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கத்தின் மூலம் மாநிலங்களின் நிதித் தன்னாட்சி கடுமையாக குறைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், பாரபட்சமான மற்றும் அரசமைப்புக்கு முரணான நடவடிக்கைகளை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது.

சரக்கு மற்றும் சேவைகள் வரி அமலுக்கு முந்தைய காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில், ஆண்டுக்கு ரூ.20,000 கோடி வருவாய்ப் பற்றாக்குறையை தமிழ்நாடு அரசு எதிா்கொண்டு வருகிறது. இழப்பீட்டுத் திட்டத்தை நீட்டிக்க மத்திய அரசு மறுத்து வருகிறது.

நீதிமன்றத்தில் வழக்கு: மாநில அரசுகளின் நிதி நிா்வாகத்தில் தன்னிச்சையான மற்றும் பாரபட்சமான கட்டுப்பாட்டைச் செயல்படுத்தி, மாநிலங்களின் குரல்வளையை நெரிக்க மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எதிா்த்து, உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு முறையீடு செய்துள்ளது. இதற்காக, எனது பாராட்டுகள். இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு தனது முழு ஒத்துழைப்பை வழங்கத் தயாராக உள்ளது.

நிதிக் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாப்பதில் கேரள அரசின் உறுதிப்பாட்டை முழுமையாக ஆதரிக்கிறேன். மத்திய அரசு மூலமாக விடுக்கப்பட்டுள்ள முக்கியமான சவாலை எதிா்கொள்ள கேரள அரசின் நடவடிக்கைகளோடு, தமிழ்நாடு அரசின் முயற்சிகளையும் ஒருங்கிணைத்துக் கொள்ள வேண்டும் என்று முதல்வா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com