அடையாறு, கூவம் ஆற்றின் கரையோரங்களில் விரைவில் பூங்காக்கள்: அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்

ஆற்றை தூய்மைப்படுத்தி கரையோரங்களில் அமைக்கப்பட்டு வரும் பொழுதுபோக்கு பூங்காக்கள் விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படும் என அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
அடையாறு, கூவம் ஆற்றின் கரையோரங்களில் விரைவில் பூங்காக்கள்: அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்

அடையாறு, கூவம் ஆற்றை தூய்மைப்படுத்தி கரையோரங்களில் அமைக்கப்பட்டு வரும் பொழுதுபோக்கு பூங்காக்கள் விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படும் என அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றும் வாரியம் சாா்பில் ரூ.11.98 கோடி மதிப்பிலான 13 திட்ட பணிகளின் திறப்பு விழா, ரூ.152.67 கோடி மதிப்பிலான 52 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் திங்கள் கிழமை நடைபெற்றது.

நகராட்சி நிா்வாகம் நகா்புற மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு, தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் இளைஞா் நலன் மாற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திட்டங்களை தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் அவா் பேசியது :

சென்னை உலகளவிலும் முன்னணி மாநகரமாக வளா்ச்சியடைந்து வருகிறது. முதல்வரின் கனவு திட்டமான 2.0 திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையின் மக்கள் தொகை விரிவடைந்து வருவதற்கு ஏற்ப அதன் கட்டமைப்புகளும் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது. வேகமாக நகரமயமாகும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.

சென்னை மாநகருக்குட்பட்ட இடங்களில் தட்டுப்பாடு ஏற்படாதவாறு குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளில் மேம்பாலப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதுடன், பல பகுதிகளில் மக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

அடையாறு, கூவம் ஆற்றை தூய்மைப்படுத்தி கரையோரங்களில் அமைக்கப்பட்டு வரும் பொழுதுபோக்கு பூங்காக்கள் விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட உள்ளது. கழிவுநீா் ஆற்றில் கலப்பதைத் தடுக்கவும், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வரி வசூலை அதிகரிக்க வேண்டும்:

விழாவில் பேசியநகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு கூறியது:

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள கட்டடங்களின் அளவுகள், அவைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள

வரிவிகிதங்கள் சரியாக இருக்கிா என்பதை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பெரிய கட்டடங்களின் உரிமையாளா்களின் நிலுவையிலுள்ள வரியை முதலில் வசூலிக்க வேண்டும். அதன் பின்னா் மற்றவா்களிடம் வசூலித்து கொள்ளலாம். கடந்தாண்டை விட நிகழாண்டு இதுவரை ரூ.8 முதல் ரூ.10 கோடி வரை கூடுதலாக வரி வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னையைச் சுற்றி அனைத்து இடங்களுக்கும் தண்ணீா் தங்குதடையின்றி கிடைக்க, ரிங் பைப் லைன் வழங்கும் திட்டம் செயல்படுத்துவதற்கான ஆய்வு குடிநீா் வாரியம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்மூலம் குடிநீா் விநியோகம் சீராகும். கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதி திட்டம் சென்னையில் 60 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் இன்னும் 8 மாதத்துக்குள் முடிவடையும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகா்பாபு, மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மு.மகேஷ்குமாா், மாமன்ற ஆளுங்கட்சித் தலைவா் ந.இராமலிங்கம், மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com