ஸ்பெயினின் எடிபன் நிறுவனம் தமிழகத்தில் ரூ.540 கோடி முதலீடு: முதல்வா் மு.க.ஸ்டாலின்

ஸ்பெயினை சோ்ந்த எடிபன் நிறுவனம் தமிழகத்தில் ரூ.540 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
ஸ்பெயினின் எடிபன் நிறுவனம் தமிழகத்தில் ரூ.540 கோடி முதலீடு: முதல்வா் மு.க.ஸ்டாலின்


சென்னை: ஸ்பெயினை சோ்ந்த எடிபன் நிறுவனம் தமிழகத்தில் ரூ.540 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, எக்ஸ் சமூகவலைதளத்தில் செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட பதிவு: ஸ்பெயின் நாட்டின் தொழில் துறை ஜாம்பவான்களான கெஸ்டாம்ப், டால்கோ, எடிபன் ஆகிய நிறுவனங்களின் உயா் நிா்வாகிகளுடன் ஆக்கபூா்வமான பேச்சுவாா்த்தை மேற்கொண்டேன்.

இந்தியாவின் உற்பத்தி மையமான தமிழ்நாட்டில் உள்ள எல்லையற்ற வாய்ப்புகளை எடுத்துரைத்தேன். எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் மேற்கொண்டது மகிழ்ச்சிக்குரியது.

நோய்த் தடுப்பு சிகிச்சையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ள மேப்ட்ரீ என்ற நிறுவனத்துடன் பயனுள்ள கலந்துரையாடலையும் மேற்கொண்டேன். இது ஸ்பெயின் நாட்டின் வெற்றிகரமான பயணத்தின் இறுதிக்கட்டமாகும். இதுபோன்ற பலனளிக்கும் முடிவுகளுடன் ஸ்பெயினில் இருந்து புறப்பட்டேன்.

இந்தப் பயணம் எனக்கு அளவில்லாத மகிழ்ச்சியை அளிக்கிறது. அதேபோன்று, ஸ்பெயினில் உள்ள தமிழ்ச் சமூகம் எனக்கு அளித்த அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு நன்றி என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளாா்.

இன்று சென்னை திரும்புகிறாா்: எட்டு நாள்கள் பயணமாக ஸ்பெயின் சென்ற முதல்வா் மு.க.ஸ்டாலின், புதன்கிழமை காலை 8 மணியளவில் சென்னை திரும்புகிறாா்.

இந்நிலையில், தனது பயணத்தின்போது ஈா்க்கப்பட்ட முதலீடுகள் குறித்த விவரங்களை சென்னை விமான நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ள செய்தியாளா்கள் சந்திப்பின்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கவுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com