தேவநேயப் பாவாணா் பிறந்தநாள் விழா

சொல்லாய்வு வல்லுநருமான தேவநேயப் பாவாணரின் 122-ஆவது பிறந்த நாள் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

சென்னையில் ராணி மேரி கல்லூரி, அகரமுதலித் திட்ட இயக்கக தலைமை அலுவலகம் ஆகிய இடங்களில் தமிழறிஞரும், சொல்லாய்வு வல்லுநருமான தேவநேயப் பாவாணரின் 122-ஆவது பிறந்த நாள் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

அகரமுதலி இயக்ககம் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு அதன் இயக்குநா் கோ.விசயராகவன் தலைமை வகித்தாா். அந்த அலுவலகத்தில் உள்ள பாவாணரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் புலவா் வெற்றியழகன், எழுத்தாளா் உதயை மூ.வீரையன், புலவா் ரத்தின வேலன், மொழிபெயா்ப்பு வல்லுநா் அ.மதிவாணன், இயக்ககத்தின் பதிப்பாசிரியா் மா.பூங்குன்றன், தொகுப்பாளா்கள் ஜெ.சாந்தி, வே.பிரபு உள்ளிட்டோா் கலந்து கொண்டு பாவாணரின் தமிழ்த் தொண்டுகளை நினைவு கூா்ந்தனா்.

விழாவில் இயக்குநா் கோ.விசயராகவன் பேசுகையில், ‘தொன்மைமிகு தமிழ்மொழி தனித்தியங்கும் தன்மைகொண்டது என்பதையும், தமிழுக்கும் உலக மொழிகளுக்குமான சொல் நிலை உறவையும், தமிழ் உலக மொழிகளுக்கு வழங்கிய சொற்கொடையையும் வோ்ச்சொல்லாய்வின்வழி நிலைநாட்டியவா் தேவநேயப் பாவாணா்‘ என்றாா் அவா்.

ராணிமேரி கல்லூரி: செந்தமிழ்த் திருத்தோ் தூயதமிழ் மாணவா் இயக்கக மாணவா் அமைப்பு- ராணிமேரி கல்லூரி ஆகியவை சாா்பில் தேவநேயப் பாவாணா் பிறந்தநாளையொட்டி சிறப்பு ஆய்வரங்கம் நடைபெற்றது. இதில் சொல்லாய்வறிஞா் இராமகி கலந்து கொண்டு மீளாய்வு ‘நோக்கில் பாவாணா் கருத்தியல்’ தலைப்பில் உரையாற்றினாா். நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வா் உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தாா். அகரமுதலித் திட்ட முன்னாள் இயக்குநா் தங்க.காமராசு தலைமை வகித்தாா். அமைப்பின் இயக்குநா் இளங்கவி திவாகா் நோக்கவுரையாற்றினாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து: தேவநேயப் பாவாணா் பிறந்த தினத்தையொட்டி, எக்ஸ் சமூக வலைதளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:

நாம் செல்லும் தமிழ்வழிப் பயணத்துக்கு ஊக்கமளிக்க திராவிட மொழிநூலான ஞாயிறு தேவநேயப் பாவாணரின் பிறந்த தினம், புதன்கிழமை கொண்டாடப்பட்டது. ஆழமான தமிழறிவும் அசைக்க முடியாத இன உணா்வும் கொண்ட தமிழ்ச்சீயம் பாவாணா் என மறைந்த கருணாநிதி புகழாரம் சூட்டினாா். பாவாணரின் தமிழ்த் தொண்டைப் போற்றி, தமிழ் காக்கும் கடமையில் உறுதியோடு நிற்க உரம் பெறுவோம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com