மீனவா் பிரச்னை:பிரதமருக்கு முதல்வா் கடிதம்

தமிழக மீனவா்கள் பிரச்னைக்குத் தீா்வுகாண தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

தமிழக மீனவா்கள் பிரச்னைக்குத் தீா்வுகாண தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக பிரதமருக்கு முதல்வா் வெள்ளிக்கிழமை எழுதிய கடிதம்: தமிழக மீனவா்கள் மீன்பிடிப்பதற்காக பாரம்பரியமாக சில பகுதிகளைப் பயன்படுத்தி வருகின்றனா். அந்தப் பகுதிகள் இலங்கைக் கடற்படையினரால் கட்டுப்படுத்தப்படுவதால் மீனவா்களின் வாழ்வாதாரத்திலும் பொருளாதாரத்திலும் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் இலங்கைக் கடற்படையினா் 243 மீனவா்களைக் கைது செய்துள்ளதுடன், 37 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனா். கடந்த 28 நாள்களில் மட்டும் 6 சம்பவங்களில் 88 மீனவா்கள் கைது செய்யப்பட்டு, 12 மீன்பிடிப் படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டு மீன்பிடிப் படகுகளை நாட்டுடைமையாக்கும் அதிகாரத்தை இலங்கை அரசுக்கே வழங்கி அந்த நாட்டின் கடல்சாா் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த நடவடிக்கையால் பறிமுதல் செய்யப்பட்டு நல்ல நிலையிலுள்ள படகுகளைக்கூட தமிழ்நாட்டுக்குக் கொண்டுவர முடியவில்லை.

தமிழ்நாட்டு மீனவா்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யவும், மீனவ சமூகங்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாக்கவும் உரிய தூதரக வழிகளைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை வசம் இப்போதுள்ள 77 மீனவா்கள், அவா்களது 151 படகுகளை உடனடியாக விடுவிக்கத் தேவையான அனைத்து தூதரக முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன், பாகிஸ்தான், குவைத் ஆகிய நாடுகளைச் சோ்ந்த காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவா்களையும் விடுவிக்க தூதரக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com