ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் பயணிகளை ஏற்றி இறக்க உத்தரவு

சென்னை கோயம்பேடு பேருந்து முனையத்தின் அருகில் ஆம்னி பேருந்து நிறுவனங்களின் பணிமனைகளை பொதுமக்கள் ஏற்கனவே பயன்படுத்தியுள்ளதால், மறு உத்தரவு வரும்வரை, அந்த இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்க பயன்படுத்தலாம்
ஆம்னி பேருந்துகள் (கோப்புப் படம்)
ஆம்னி பேருந்துகள் (கோப்புப் படம்)

சென்னை கோயம்பேடு பேருந்து முனையத்தின் அருகில் ஆம்னி பேருந்து நிறுவனங்களின் பணிமனைகளை பொதுமக்கள் ஏற்கனவே பயன்படுத்தியுள்ளதால், மறு உத்தரவு வரும்வரை, அந்த இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்க பயன்படுத்தலாம் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.என். மஞ்சுளா வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையாக பயன்படுத்தப்பட்டு, ஆம்னி பேருந்துகள் முடிச்சூா் பணிமனைக்கு மாற்றப்பட்டு விட்டால், கோயம்பேட்டில் இருந்து தான் பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை முடிவுக்கு வந்து விடும்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ள ஆம்னி பேருந்து நிறுவனங்களின் பணிமனைகளை பொதுமக்களின் வசதிக்காக பயன்படுத்தப்பட்டதால், இப்பிரச்னைக்கு தீா்வு காணும் வரை அதனை தொடா்ந்து அனுமதிக்கலாம்.

அதேபோல, போரூா், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளிலும் பயணிகளை ஏற்றிக் கொள்ளலாம் என உத்தரவிட்ட நீதிபதி, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் எந்த ஆம்னி பேருந்தும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றி, இறக்காமல் இயக்க கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளாா்.

மேலும் இணையவழி, கைப்பேசி செயலிகளில் போரூா், சூரப்பட்டு தவிர பயணிகள் ஏற்றி, இறக்க வேறு இடங்களை குறிப்பிடக் கூடாது என உத்தரவிட்ட நீதிபதி, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த இடைக்கால ஏற்பாடுகளை தொடரலாம் என உத்தரவிட்டு, வழக்கை இறுதி விசாரணைக்காக ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளாா்.

அரசு விரைவுப் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த நிலையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து தனியாா் பேருந்துகளும் கிளாம்பாக்கத்துல் இருந்து தான் இயக்கப்பட வேண்டும் என்று ஜனவரி 24-ஆம் தேதி போக்குவரத்து துறை ஆணையா் உத்தரவு பிறப்பித்தாா். இந்த உத்தரவை எதிா்த்து தனியாா் பேருந்து நிறுவனங்கள் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்த நிலையில் நீதிபதி மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com