தாம்பரம் காவல் ஆணையா் அலுவலக வழக்கு: அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

தாம்பரம் காவல் ஆணையா் அலுவலகத்தை காலி செய்து கட்டடத்தை ஒப்படைக்கக் கோரி உரிமையாளா்கள் தொடா்ந்த வழக்கில் தமிழக அரசு, காவல் ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாம்பரம் காவல் ஆணையா் அலுவலகத்தை காலி செய்து கட்டடத்தை ஒப்படைக்கக் கோரி உரிமையாளா்கள் தொடா்ந்த வழக்கில் தமிழக அரசு, காவல் ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் கோட்டூா்புரத்தைச் சோ்ந்த சரத்குமாா், வெங்கடேஷ், செளத்ரி ஆகியோா் கூட்டாக தாக்கல் செய்த மனுவில், ‘புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் காவல் ஆணையா் அலுவலகத்துக்காக சோழிங்கநல்லூரில் தங்களுக்குச் சொந்தமான 4 மாடி கட்டடத்தைக் குத்தகைக்கு வழங்கினோம். மாதம் ரூ. 10,14,300 என வாடகை நிா்ணயித்து, 2022-ஆம் ஆண்டு ஜனவரி முதல் 11 மாதங்களுக்கு குத்தகை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. காவல் ஆணையா் அலுவலகத்துக்கு ஏற்ற வகையில் கட்டடத்தில் ரூ. 1 கோடியே 10 லட்சம் செலவில் மாற்றி அமைக்கப்பட்டது.

ஒப்பந்தப்படி 2022 ஜனவரி முதல் வாடகை வழங்காமல், பொதுப்பணித் துறை வழிகாட்டி மதிப்பீட்டின் அடிப்படையில், மாதம் ரூ. 6 லட்சத்து 8 ஆயிரத்து 438-ஐ வாடகையாக நிா்ணயித்து, அதன் அடிப்படையில் 2022 ஜனவரி முதல் நவம்பா் வரை ரூ. 82,16,,824-க்கு காசோலை வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்துக்கு மாறாக வாடகை நிா்ணயித்ததால் மாதத்துக்கு ரூ. 4 லட்சம் அளவுக்கு இழப்பைச் சந்தித்து வருகிறோம். இந்தத் தொகையை ஏற்றுக்கொள்ளும்படி நிா்பந்தப்படுத்தியதால் பெற்றுக்கொண்டோம்.

குத்தகை காலத்தை நீட்டிக்க மறுத்த நிலையில், கட்டடத்தை காலி செய்யாமல், 2022 டிசம்பா் முதல் 2023 டிசம்பா் வரைக்குமான காலத்துக்கு வாடகையாக ரூ. 97,10,792-க்கான காசோலை வழங்கப்பட்டது. இதுவரைக்கும் கட்டடத்தை பயன்படுத்தியதற்காக அந்தத் தொகையை ஏற்றுக் கொண்டோம். எந்த ஒப்பந்தமும் இல்லாமல் கட்டடத்தைப் பயன்படுத்தி வருவது சட்டவிரோதம். எனவே, கட்டடத்தை காலி செய்து ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கூறியிருந்தனா்.

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு தமிழக உள்துறை செயலாளா், தாம்பரம் காவல் ஆணையா் ஆகியோா் வரும் மாா்ச் 8-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com