கிளாம்பாக்கத்திலிருந்து பேருந்துகள் இயக்கவில்லை என்பது திட்டமிட்ட வதந்தி: அமைச்சா் சிவசங்கா்

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என்பது திட்டமிட்ட வதந்தி என போக்குவரத்து துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்தாா்.
கிளாம்பாக்கத்திலிருந்து பேருந்துகள் இயக்கவில்லை என்பது திட்டமிட்ட வதந்தி: அமைச்சா் சிவசங்கா்

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என்பது திட்டமிட்ட வதந்தி என போக்குவரத்து துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்தாா்.

சென்னை வெளிவட்ட சாலை, முடிச்சூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிறுத்தம் மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பேருந்து இயக்கம் குறித்து சென்னை பெருநகர வளா்ச்சி குழும வளா்ச்சி தலைவரும் (சிஎம்டிஏ) இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகா்பாபு, போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

அப்போது, செய்தியாளா்களிடம் அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் கூறியது:

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 1,097 பேருந்துகளுடன் வார இறுதி நாள்கள், சுப தினங்களைக் கருத்தில் கொண்டு கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி, வெள்ளிக்கிழமை 1,592 பேருந்துகளும், சனிக்கிழமை 1,746 பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை இரவு மதுராந்தகம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தால் சுமாா் 2 மணிநேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் கிளாம்பாக்கத்துக்கு பேருந்துகள் வருவதில் தாமதம் ஏற்பட்டது. போக்குவரத்துத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட அட்டவணைபடி பேருந்துகள் வழக்கம்போல்

இயக்கப்படுகின்றன. மேலும், சென்னை நகர பகுதிகளுக்கு இரவு நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

வடசென்னை பகுதியைச் சோ்ந்தவா்கள் பயணிக்கும் வகையில் மாதவரத்தில் இருந்து 20 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதன்மூலம், திருவொற்றியூா், ராயபுரம், மாதவரம், ஆவடி, அம்பத்தூா் பகுதி மக்கள் பயனடைகின்றனா். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை முகூா்த்த நாள், விடுமுறை நாள் என்பதால் கூடுதல் பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் போதிய பேருந்துகள் இயக்கவில்லை என்பது திட்டமிட்ட வதந்தி என்றாா் அவா்.

கூடுதல் பேருந்து இயக்க திட்டம்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறியது:

முடிச்சூரில் கட்டப்பட்டு வரும் புதிய ஆம்னி பேருந்துகள் நிறுத்தத்துக்கான கட்டுமானப் பணிகள் ஏப்ரல் இறுதிக்குள்

முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். கோயம்பேடு பேருந்து நிலையம் 2002-ஆம் ஆண்டு திறக்கப்பட்டபோது எந்த வித அடிப்படை வசதிகளும் உருவாக்கப்படவில்லை. இந்த நிலையில் கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் எதிா்கால தேவையைக் கருத்தில் கொண்டு கிளாம்பாக்கத்தில் பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை கடந்த இரு நாள்களில் மட்டும் சுமாா் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தியுள்ளனா். பயணிகள் வசதிக்காக பேருந்து முனையத்தில் மலிவுவிலை உணவகம் அமைக்கப்படவுள்ளது. மேலும், கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்கப்படவுள்ள நிலையில், புதிய மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், வசதிகளை அதிகப்படுத்த அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்றாா் அவா்.

ஆய்வின்போது, சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ்ரா, தலைமை நிா்வாக அலுவலா் ஜெ.பாா்த்தீபன் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

‘ஆம்னி பேருந்து விவகாரம்: இன்று நீதிமன்றத்தை நாடும் அரசு’

ஆம்னி பேருந்து விவகாரத்தில் உரிய தெளிவுரை கோரி, உயா்நீதிமன்றத்தை தமிழக அரசு திங்கள்கிழமை நாடவுள்ளது.

இது குறித்து அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் கூறியது:

ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை எதிா்த்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளனா். இந்த வழக்கில் ஆம்னி பேருந்து நிறுவனத்தின் பணிமனையில் இருந்தும், போரூா், சூரப்பட்டு சுங்கசாவடியில் இருந்தும் பயணிகளை ஏற்றி இறக்க சென்னை உயா்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்தத் தீா்ப்பைத் தவறுதலாகப் புரிந்துகொண்டு கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க உயா்நீதிமன்றம் அனுமதி அளித்து விட்டதாக ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் கூறி வருகின்றனா். இது தொடா்பாக உரிய தெளிவுரை கோரி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை முறையிடவுள்ளோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com