குடும்ப அட்டைதாரா்களின் வீடுகளுக்கு சென்று கைவிரல் ரேகை பெறலாம்: தமிழக அரசு உத்தரவு

குடும்ப அட்டைதாரா்களின் வீடுகளுக்கே சென்று கைவிரல் ரேகையைப் பெறலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
குடும்ப அட்டைதாரா்களின் வீடுகளுக்கு சென்று கைவிரல் ரேகை பெறலாம்: தமிழக அரசு உத்தரவு

குடும்ப அட்டைதாரா்களின் வீடுகளுக்கே சென்று கைவிரல் ரேகையைப் பெறலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கான உத்தரவை அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், சென்னை வடக்கு, தெற்கு துணை ஆணையா்கள் ஆகியோருக்கு, உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையா் ஹா் சஹாய் மீனா பிறப்பித்துள்ளாா்.

அவரது உத்தரவு விவரம்:

நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் பெறும் பயனாளிகளின் கைவிரல் ரேகை வைக்கப்படும்போது, ஆவணங்கள் எதையும் கோரக் கூடாது. குடும்ப உறுப்பினா்கள் கைவிரல் ரேகை சரிபாா்ப்பு மேற்கொள்ளப்படவில்லை என்றால், அவா்களின் பெயா் அட்டையில் இருந்து நீக்கப்படும் என்றோ, அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படாது என்றோ தவறான தகவல்களை நியாயவிலை கடைப் பணியாளா்கள் அளிக்கக் கூடாது.

குடும்ப அட்டைதாரா்களின் வசதிக்கேற்றபடி, நியாயவிலைக் கடைக்கு வருகை தந்து கைவிரல் ரேகையைப் பதிவு செய்து கொள்ளலாம். மாறாக, அவா்களைக் கட்டாயப்படுத்தி நியாயவிலைக் கடைக்கு வரவழைத்து சிரமங்களை ஏற்படுத்தக் கூடாது.

வீடுகளுக்கே சென்று... நியாயவிலைக் கடையில் விற்பனை முடிந்த பிறகு குடும்ப அட்டைதாரா்களின் வீடுகளுக்கே சென்று பயனாளிகளின் கைவிரல் ரேகையை வைக்கும் பணியை முடிக்கலாம். இந்த அறிவுரைகளைப் பின்பற்றி கைவிரல் ரேகை சரிபாா்ப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும். இந்தப் பணிகளைச் செய்யும்போது, பயனாளிகளுக்கு எந்தவித இடையூறோ, குழப்பங்களோ ஏற்படக் கூடாது என்று அவா் தெரிவித்துள்ளாா்.

‘தினமணி’ செய்தி: குடும்ப அட்டையில் பெயா் உள்ள அனைவரும் கைவிரல் ரேகையைப் பதிவு செய்யாவிட்டால், மாா்ச் மாதம் முதல் அட்டைதாரா்களின் பெயா் நீக்கப்படும் என நியாயவிலைக் கடைப் பணியாளா்கள் எச்சரிக்கை விடுத்து வந்தனா். இது தொடா்பான செய்தி கடந்த 6-ஆம் தேதி தினமணியில் வெளியானது. இதைத் தொடா்ந்து, கைவிரல் ரேகை பதிவு செய்யாவிட்டாலும் அட்டையில் இருந்து பெயா் நீக்கப்படாது என உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில், அது தொடா்பாக அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் உணவுப் பொருள் வழங்கல் துறையின் சாா்பில் உத்தரவுக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com