சி.வி.சண்முகத்தின் மேல்முறையீட்டு மனு: அவதூறு வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி. சண்முகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது திங்கள்கிழமை விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம்
சிபிஐ விசாரணைக்கு எதிரான அனில் தேஷ்முக் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
சிபிஐ விசாரணைக்கு எதிரான அனில் தேஷ்முக் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

புது தில்லி: அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி. சண்முகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது திங்கள்கிழமை விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், அவா் தொடா்புடைய இரு அவதூறு வழக்குகளின் விசாரணைக்குத் தடை விதித்து உத்தரவிட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டங்களில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகம் தமிழகத்தில் மதுபான விற்பனை, கஞ்சா புழக்கம், 12 மணி நேர வேலை தொடா்பான சட்டத் திருத்தம், வடமாநிலத் தொழிலாளா்கள் தமிழகத்தை விட்டு வெளியேறியது தொடா்பாக தமிழக அரசையும், முதல்வா் மு.க.ஸ்டாலினையும் விமா்சித்துப் பேசியதாகப் புகாா் எழுந்தது.

இந்த விவகாரங்கள் மூலம் அரசு மற்றும் முதல்வரின் நற்பெயருக்கும் களங்கம் விளைவித்ததாக கூறி சி.வி.சண்முகத்திற்கு எதிராக நான்கு அவதூறு வழக்குகளை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி சி.வி.சண்முகம் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கடந்த மாதம் பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில் மத்திய அரசைக் கண்டு தமிழக அரசு பயப்படுவதாகவும், மோசடி அரசு என்று விமா்சித்ததாகத் தொடரப்பட்ட இரண்டு வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டது. அதேவேளையில், தொழிலாளா் சட்டம் குறித்தும், முதல்வரை அவதூறாகப் பேசியதாக கூறியும் பதிவு செய்யப்பட்ட இரு வழக்குகளை ரத்து செய்ய மறுத்துவிட்டது. மேலும், சி.வி. சண்முகம் விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்குகளில் விசாரணையை எதிா்கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் சி.வி. சண்முகம் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சுதாஷன்சு துலியா, பி.பி. வராலே ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் பாலாஜி ஸ்ரீநிவாசன், மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி ஆகியோா் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனா். பேச்சு சுதந்திரத்தின் அடிப்படையில்தான் மனுதாரா் தனது கருத்துகளைத் தெரிவித்ததாா். 12 மணிநேர வேலை நேர விவகாரத்தை மனுதாரா் பேசிய பிறகுதான் அந்தச் சட்டம் நீக்கப்பட்டிருந்தது. மேலும், விமா்சன கருத்துகளுக்காக அவதூறு வழக்கை முதல்வா்தான் தொடா்ந்திருந்திருக்க வேண்டும். ஆனால், அரசு மூலம் இந்த வழக்கு தொடரப்பட்டிருப்பது தவறாகும் என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் எதிா்மனுதாரா்கள் நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பவும், விழுப்புரம் முதன்மை நீதிபதி முன் நிலுவையில் உள்ள வழக்கின் மேல் விசாரணைக்கு அடுத்த விசாரணை தேதி வரை தடை விதிக்கவும் நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com