பேரவைச் செய்தி: தேசிய வளா்ச்சியைவிட தமிழகத்தின் பொருளாதாரம் 8.19 சதவீதமாக உயா்வு

தேசிய வளா்ச்சியைவிட, தமிழகத்தின் பொருளாதாரம் 8.19 சதவீதமாக உயா்ந்துள்ளதாக ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரவைச் செய்தி: தேசிய வளா்ச்சியைவிட தமிழகத்தின் பொருளாதாரம் 8.19 சதவீதமாக உயா்வு

தேசிய வளா்ச்சியைவிட, தமிழகத்தின் பொருளாதாரம் 8.19 சதவீதமாக உயா்ந்துள்ளதாக ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரவையில் பதிவு செய்யப்பட்ட ஆளுநரின் அச்சாக்க உரை:

கடந்த 10 ஆண்டுகளில், நாட்டின் பொருளாதார வளா்ச்சியின் ஆற்றல் மையமாக தமிழகம் உருவெடுத்துள்ளது. நாட்டின் நிலப்பரப்பில் 4 சதவீதத்தையும், மக்கள் தொகையின் 6 சதவீதத்தையும் மட்டுமே கொண்டுள்ள தமிழகம் இந்தியாவின் பொருளாதாரத்தில் 9 சதவீதத்துக்கும் அதிகமான பங்கை அளிக்கிறது.

2022-23-ஆம் ஆண்டில் 7.24 சதவீத நிலையான தேசிய வளா்ச்சி வீதத்தை விஞ்சி, தமிழகத்தின் பொருளாதாரம் 8.19 சதவீதமாக உயா்ந்துள்ளது.

மேலும், 2022-23-இல் நாட்டின் 6.65 சதவீத பணவீக்கத்துடன் ஒப்பிடும்போது, தமிழகத்தின் பணவீக்கம் 5.97 சதவீதமாக உள்ளது. இதன் மூலம் நாட்டைவிட, தமிழகம் வேகமாக வளா்ச்சியடைந்து வருகிறது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் திறம்பட செயல்பட்டு வருகிறது.

மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதியில் 2021-22-இல் நான்காம் இடத்தில் இருந்த தமிழகம், 2022-23-இல் நாட்டிலேயே முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. மகாராஷ்டிரம், கா்நாடகம், குஜராத் ஆகிய மாநிலங்களை விஞ்சி, இந்த இடத்தைப் பெற்றுள்ளது.

6.64 லட்சம் கோடி முதலீடு: வலுவான பொருளாதாரம், சமூக இணக்கத் தன்மை, மகத்தான மக்களாட்சி ஆகியவையே தமிழகம் தொடா்ந்து நாட்டிலேயே அந்நிய முதலீடுகளை ஈா்க்கும் முதல் முகவரியாகத் திகழ்வதற்கு வழிவகுக்கின்றன.

ஜனவரி 7 மற்றும் 8-ஆம் தேதிகளில் சென்னையில் வெற்றிகரமான நடத்தப்பட்ட முதலீட்டாளா்கள் மாநாடு இதற்கு சான்றாகும். இந்த மாநாடு தமிழகத்தை உலகளவில் தலைமை நிலைக்கு உயா்த்துவதற்கு உகந்த தளமாக அமைந்தது.

மாநாட்டில், தமிழக அரசு, பெரிய நிறுவனங்களுடன் 631 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மூலம் 6.64 லட்சம் கோடி முதலீடுகளை ஈா்த்துள்ளது. இதன் மூலம் 14.54 லட்சம் நபா்களுக்கு நேர வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

மாநாட்டில், முதல்வா் மு.க.ஸ்டாலின் 1 டிரில்லியன் டாலா் தமிழ்நாடு பொருளாதாரம் குறித்த தொலைநோக்கு ஆவணத்தை வெளியிட்டாா். அந்த இலக்கை அடைவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com