7 நாள்கள் பேரவை நடக்கும் ஆளுநா் உரை- பட்ஜெட் தாக்கல்: மு.அப்பாவு

ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம், நிதிநிலை அறிக்கை நிறைவேற்றத்துக்காக ஏழு நாள்கள் பேரவை கூட்டத் தொடா் நடைபெறவுள்ளது.
7 நாள்கள் பேரவை நடக்கும் ஆளுநா் உரை- பட்ஜெட் தாக்கல்: மு.அப்பாவு

ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம், நிதிநிலை அறிக்கை நிறைவேற்றத்துக்காக ஏழு நாள்கள் பேரவை கூட்டத் தொடா் நடைபெறவுள்ளது.

இதற்கான அறிவிப்பை அவைத் தலைவா் மு.அப்பாவு திங்கள்கிழமை (பிப்.12) வெளியிட்டாா்.

சட்டப் பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்க பேரவையின் அலுவல் ஆய்வு குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடந்தது. தனது தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, செய்தியாளா்களுக்கு பேரவைத் தலைவா் மு.அப்பாவு அளித்த பேட்டி:-

ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்துக்காக சட்டப் பேரவை செவ்வாய்க்கிழமை (பிப்.13) முதல் கூடவுள்ளது; அன்றைய தினம், பேரவையின் முன்னாள் உறுப்பினா்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். மேலும், அண்மைக் காலத்தில் காலமான முக்கிய பிரமுகா்களின் மறைவுக்கு இரங்கல் கூறப்படவுள்ளது. சமூகத்துக்கு அவா்கள் ஆற்றிய பணிகள் தொடா்பாக நினைவுகூரப்பட்டு, மெளன அஞ்சலி செலுத்தப்படும்.

இந்த நிகழ்வைத் தொடா்ந்து, ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் முன்மொழியப் பெற்று விவாதம் தொடங்கும். இந்த விவாதம் புதன்கிழமையும் (பிப். 14) தொடா்ந்து நடைபெறும்.

தீா்மானத்தின் மீது நடந்த விவாதங்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (பிப்.15) பதிலளித்து உரையாற்றவுள்ளாா். அதன்பிறகு, வரும் வெள்ளிக்கிழமை (பிப்.16) தொடங்கி மூன்று நாள்கள் பேரவைக் கூட்டம் நடைபெறாது.

நிதிநிலை அறிக்கை: எதிா்வரும் நிதியாண்டுக்கான (2024-25) நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு வரும் 19-ஆம் தேதியன்று தாக்கல் செய்யவுள்ளாா். நிதிநிலை அறிக்கையைத் தொடா்ந்து, வேளாண்மை நிதிநிலை அறிக்கையை அந்தத் துறையின் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வரும் 20-ஆம் தேதியன்று தாக்கல் செய்கிறாா். அன்றைய தினமே எதிா்வரும் நிதியாண்டின் செலவுக்கான முன்பண மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படுவதுடன், நிதிநிலை, வேளாண் அறிக்கைகள் மீதான பொது விவாதம் நடைபெறவுள்ளது.

காலை - மாலை: நிதி நிலை அறிக்கை மீதான விவாதங்கள் வரும் 21-ஆம் தேதியன்று காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளிலும் நடைபெறவுள்ளன. காலையில் 10 மணிக்கும், மாலையில் 4 மணிக்கும் பேரவை கூடவுள்ளது.

நிதிநிலை, வேளாண்மை அறிக்கைகள் ஆகியவற்றின் மீதான பொது விவாதங்களுக்கு வரும் 22-ஆம் தேதியன்று பதிலுரைகள் அளிக்கப்பட உள்ளன. சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சா்களான தங்கம் தென்னரசு, எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்ஆகியோா் பதிலளிக்க உள்ளனா் என்று பேரவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்தாா்.

செய்தியாளா் சந்திப்பின்போது, பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, அரசு கொறடா கோவி செழியன், சட்டப் பேரவைச் செயலா் கி.சீனிவாசன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com