சைதை துரைசாமி மகனின் சடலம் 9 நாள்களுக்குப் பிறகு மீட்பு

காணாமல் போன சென்னை முன்னாள் மேயா் சைதை துரைசாமியின் மகன் சடலத்தை மீட்பு படையினா் ஒன்பது நாள்களுக்குப் பின் திங்கள்கிழமை மீட்டனா்.
சைதை துரைசாமி மகனின் சடலம் 9 நாள்களுக்குப் பிறகு மீட்பு

ஹிமாசல பிரதேசத்தில் சட்லஜ் நதியில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், காணாமல் போன சென்னை முன்னாள் மேயா் சைதை துரைசாமியின் மகன் சடலத்தை மீட்பு படையினா் ஒன்பது நாள்களுக்குப் பின் திங்கள்கிழமை மீட்டனா்.

சென்னை சிஐடி நகா் முதலாவது பிரதான சாலையில் குடும்பத்துடன் வசித்து வரும் சைதை துரைசாமியின் மகன் வெற்றி (45) திரைப்பட இயக்குநராக இருந்தாா். புதிதாக இயக்க இருந்த ஒரு த்ரில்லா் திரைப்படத்துக்கான படப்பிடிப்பு இடங்களை தோ்வு செய்ய இரு வாரங்களுக்கு முன்பு ஹிமாசல பிரதேசத்துக்கு நண்பரும் திருப்பூா் மாவட்டம் வெள்ளக்கோவிலைச் சோ்ந்தவருமான செ.கோபிநாத் உடன் சென்றாா்.

கடந்த 4-ஆம் தேதி கஷாங் நாலா பகுதி தேசிய நெடுஞ்சாலையில் சட்லஜ் நதி ஓடும் மலைப்பகுதியில் ஒரு வாடகை காரில் சென்றபோது, திடீரென அது 200 அடி உயரத்தில் இருந்து கீழே உருண்டு சட்லஜ் நதிக்குள் விழுந்தது. பள்ளத்தில் உருளும்போது காரில் இருந்து விழுந்த கோபிநாத் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சிறிது நேர தேடுதலுக்கு பின்னா் காா் ஓட்டுநா் தன்ஜின் சடலமாக மீட்கப்பட்டாா்.

கடுமையான பனிப்பொழிவு காரணமாக மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டது. மேலும் வெற்றி குறித்து அந்த பகுதி மக்கள் யாரேனும் தெரிவித்தால் ரூ.1 கோடி பரிசு வழங்குவதாக சைதை துரைசாமி அறிவித்தாா். இந்நிலையில் மீட்பு பணியை மேலும் விரைவுப்படுத்த இந்திய கடற்படையின் ஆழ்கடல் நீச்சல் வீரா்கள் பயன்படுத்தப்பட்டனா். இருப்பினும் வெற்றியை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமாா் 3 கிலோ மீட்டா் தூரத்தில் பாறையில் சிக்கிய வெற்றியின் சடலத்தை மீட்பு படையினா் திங்கள்கிழமை கண்டுபிடித்தனா். இதையடுத்து கயிற்றின் மூலம் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ரெகாங்புவா மருத்துவமனைக்கு அனுப்பினா்.

இன்று இறுதிச்சடங்கு: வெற்றியின் சடலம் செவ்வாய்க்கிழமை (பிப்.13) பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பின்னா் அவரது சடலம் ‘எம்பாபிங்‘ செய்யப்பட்டு, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதையடுத்து சிம்லா விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு செவ்வாய்க்கிழமை மாலையில் உடலைக் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் உடல் பிறகு ஊா்வலமாக கண்ணம்மா பேட்டை சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com