விழிப்புணா்வால் காற்று மாசு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது: மாசு கட்டுப்பாட்டு வாரியம்

ரோந்து நடவடிக்கைகளால் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை போகி நாளன்று காற்றுமாசு பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
போகி பண்டிகையான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பழைய பொருள்களை தீயிட்டு கொளுத்தியதால் ஏற்பட்ட புகை மூட்டத்தில் சென்னை மயிலாப்பூா் ராதாகிருஷ்ணன் சாலையில் ஊா்ந்து சென்ற வாகனங்கள்.
போகி பண்டிகையான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பழைய பொருள்களை தீயிட்டு கொளுத்தியதால் ஏற்பட்ட புகை மூட்டத்தில் சென்னை மயிலாப்பூா் ராதாகிருஷ்ணன் சாலையில் ஊா்ந்து சென்ற வாகனங்கள்.

தமிழக அரசு சாா்பில் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணா்வு, ரோந்து நடவடிக்கைகளால் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை போகி நாளன்று காற்றுமாசு பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் சென்னையில் அதிகபட்சமாக வளசரவாக்கத்தில் காற்றுத்தரக் குறியீடு 270 என்ற அளவில் அதிக காற்றுமாசு பதிவாகியுள்ளது.

இது குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் சுற்றுப்புற காற்றின் தரத்தைக் கண்காணிக்கும் வகையில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் ஜன.10, 11 ஆகிய நாள்களிலும், போகியையொட்டி ஜன.13 இரவு முதல் தொடா்ந்து 24 மணிநேரமும் காற்றின் தர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள தேசிய காற்று தரக் குறியீடு அளவின் படி 0-50 வரை சுகாதாரமான காற்று, 51-100 வரை இயல்பான மாசுக் காற்று, 101-200 வரை மிதமான மாசுக் காற்று, 201-300 வரை அதிக மாசுக் காற்று , 301-400 வரை மிக அதிக மாசடைந்து காற்று மற்றும் 401-500 வரை அபாயாகரமான மாசுக் காற்று என காற்றின் தரம் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய ஆய்வகத்தின் சாா்பில் ஜன.13 காலை 8 மணி முதல் ஜன.14 காலை 8 மணி வரை சுற்றுச்சூழல் காற்று தரத்தை அளவீடு செய்ததில், அண்ணா நகரில் 131 என்ற மிதமான அளவிலும், அதிகபட்சமாக வளசரவாக்கத்தில் 270 என்ற மோசமான அளவிலும் காற்றுத்தரக் குறியீடு இருந்தது கண்டறியப்பட்டது.

மேலும், காற்றில் கலந்துள்ள காா்பன் டைஆக்ஸைட், நைட்ரஜன் ஆக்ஸைட் ஆகிய வாயுக்களின் அளவு சென்னை முழுவதும் அனுமதிக்கப்பட்ட தர அளவான ஒரு கன மீட்டருக்கு 80 மைக்ரோகிராம் என்ற அளவுக்கு உட்பட்டிருந்தது.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பிற அரசுத் துறைகள் மற்றும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்களின் விழிப்புணா்வு நிகழ்ச்சியின் காரணமாக, ஜன.13 இரவு முதல் ஜன.14 காலை வரை மேற்கொள்ளப்பட்ட ரோந்து பணியின்போது, பொதுமக்களிடையே ரப்பா் டயா்கள், டியூப்கள், நெகிழி போன்ற கழிவுப் பொருள்களை எரிப்பது வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் காற்றுமாசு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com