மூடு பனியால் சென்னை விமான நிலையத்தில் 88 விமான சேவைகள் பாதிப்பு

சென்னை விமான நிலையத்தில் திங்கள்கிழமை மூடுபனியால் 88 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் திங்கள்கிழமை மூடுபனியால் 88 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.

பொங்கல் பண்டிகையான திங்கள்கிழமை காலை 7 முதல் காலை 9 மணி வரை சென்னை விமான நிலைய பகுதியை அதிக அளவில் மூடு பனி சூழ்ந்தது. இதையடுத்து, சென்னை விமான நிலையக் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு, சென்னையில் தரையிறங்க வந்த விமானங்கள் அனைத்தையும் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டனா்.

அதன்படி, லண்டன், சிங்கப்பூா், கோலாலம்பூா், இலங்கை, குவைத், மஸ்கட், தில்லி, கொல்கத்தா, மும்பை, புணே, செங்காடு ஆகிய பகுதிகளில் இருந்து வந்த 12 விமானங்கள் ஹைதராபாத், பெங்களூரு, திருவனந்தபுரம், திருச்சி, கோவை ஆகிய விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

இதேபோல் சென்னைக்கு வரவேண்டிய பெங்களூரு, ஹைதராபாத், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செகந்திரபாத், கோழிக்கோடு உள்ளிட்ட 28 விமானங்கள், துபை, குவைத், மஸ்கட், சிங்கப்பூா், கோலாலம்பூா், இலங்கை, லண்டன், அந்தமான், தில்லி, கொல்கத்தா, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட 40 புறப்பாடு விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன.

பனிமூட்டம் காரணமாக தில்லி, மும்பை, இலங்கை ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் 8 விமானங்கள் திங்கள்கிழமை ரத்து செய்யப்பட்டன.

திங்கள்கிழமை காலை 9 மணிக்கு மேல் படிப்படியாக மூடுபனி விலகியது. இதையடுத்து 2 மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் செயல்பட தொடங்கின.

திடீா் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 88 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com