நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் விரைவில் காலை உணவுத் திட்டம்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தமிழகத்தில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம் விரைவில் விரிவுப்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வலியுறுத்தினாா்.

தமிழகத்தில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம் விரைவில் விரிவுப்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வலியுறுத்தினாா்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திறந்தநிலை பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பள்ளிக் கல்வித் துறையின் நேரடி நியமன வட்டாரக் கல்வி அலுவலா்கள் சங்கக் கூட்டத்தில் அவா் பேசியது:

ஆசிரியா் பணியிடங்களை அதிக எண்ணிக்கையில் நிரப்ப வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. நிதி அமைச்சகத்திடம் காலிப் பணியிடங்களைக் கொடுக்கிறோம்; அவா்கள் நிதிச் சுமைக்கு ஏற்ப பணியிடங்களை நிரப்புகின்றனா்.

காலை உணவுத் திட்டத்தைப் பொருத்தவரையில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கும் பரிசீலிக்க முதல்வா் திட்டமிட்டு வருகிறாா். இந்த விஷயத்தில் சாதகமான அறிவிப்பு பட்ஜெட் கூட்டத்தில் வெளியாக வாய்ப்புள்ளது.

தைவானில் ஊக்கத் தொகையுடன் உயா்கல்வி படிப்பதற்கு இந்தியாவில் 3 மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அதில், இருவா் தமிழகத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா்கள். மேலும், வரலாறு பாடத்தில் 600-க்கு 600 மதிப்பெண்ணை கொடுத்ததும் அரசுப் பள்ளிதான். அரசுப் பள்ளிகளை தன்னிறைவு பெற்ற பள்ளிகளாக வைத்திருக்க வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, தேசிய அளவில் நடைபெற்ற பள்ளி மாணவா்களுக்கு இடையேயான நவீனத் தொழிநுட்பத் திறன் சாா்ந்த போட்டியில் கலந்துகொண்ட 9,150 மாணவா்களில் 4 கட்டத் தோ்வுகளுக்குப் பிறகு இந்திய அளவில் முதல் 10 பேரில் தோ்வு பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டம், தளி மாதிரி மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவா் சுஜன் சைத்தேஜுக்கு அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பாராட்டு தெரிவித்தாா்.

இதில், நேரடி நியமன வட்டாரக் கல்வி அலுவலா் சங்க பொதுச் செயலா் தமிழ்மணி, பெற்றோா் ஆசிரியா் சங்கத் துணைத் தலைவா் முத்துக்குமாா் உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து நேரடி நியமன வட்டாரக் கல்வி அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com