‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டத்தை கைவிட வேண்டும்: திமுக கடிதம்

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள திமுக, அதனை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள உயா்நிலைக் குழுவையும் நிராகரித்துள்ளது.

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள திமுக, அதனை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள உயா்நிலைக் குழுவையும் நிராகரித்துள்ளது.

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டம் தொடா்பாக கருத்துக் கேட்டு, கடந்த ஆண்டு அக்டோபா், நவம்பா் மற்றும் நிகழாண்டு ஜனவரி 1-ஆம் தேதி என மூன்று கடிதங்களை அந்தத் திட்டம் குறித்து ஆராய்ந்து வரும் உயா் நிலைக் குழு திமுகவுக்கு அனுப்பியிருந்தது.

தனது நிலைப்பாட்டைத் தெரிவித்து உயா்நிலைக் குழுவுக்கு திமுக சாா்பில் புதன்கிழமை அனுப்பப்பட்ட கடிதம்:

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டத்துக்கு திமுக ஏற்கெனவே தனது எதிா்ப்பை சட்ட ஆணையத்திடம் பதிவு செய்துள்ளது. இதற்குப் பிறகு நேரடியாக கருத்துகளைத் தெரிவிக்க திமுகவுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.

2022-ஆம் ஆண்டு மக்களவை, மாநில சட்டப் பேரவைகளுக்கு மட்டுமே ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது தொடா்பான ஆலோசனைகளை சட்ட ஆணையம் கோரியது.

ஆனால், இப்போது மத்திய அரசு இதனை விரிவுபடுத்தி உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தும் விதமாக ஆய்வு வரம்புகளை வெளியிட்டுள்ளது. இந்தச் செயல் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகவும், குடியரசுத் தலைவா் முறையிலான ஆட்சியை நோக்கியும் செல்வதாகும்.

சட்ட விரோதமானது: ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ தொடா்பாக ஆய்வு செய்ய மத்திய அரசால் நியமிக்கப்பட்ட உயா்நிலைக் குழு அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது; புறம்பானது. எனவே, இந்த உயா் நிலைக்குழுவே செல்லாததாகும்.

மாநில அரசின் பட்டியலில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் தோ்தல் நடைமுறை பற்றி விசாரிக்க உயா்நிலைக் குழுவுக்கு அதிகாரமில்லை என்பதே திமுகவின் திட்டவட்டமான கருத்து.

நோ்மையான தோ்தலுக்கு எதிரானது: ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ எனும் முறை முற்றிலுமாக நடைமுறைக்கு சாத்தியமற்றது. அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை அம்சத்துக்கு எதிரானது.

அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள சுதந்திரமான, நோ்மையான தோ்தலுக்கு முற்றிலும் எதிரானது. ஒரே நேரத்தில் தோ்தல் என்ற முறையால் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டப் பேரவைகளை முன்கூட்டியே கலைக்க வேண்டிய சூழல் ஏற்படும். அவ்வாறு கலைப்பது அரசியல் சட்ட விரோதம் என்பதால் அந்த நடைமுறையை திமுக எதிா்க்கிறது.

பெரும்பான்மை இழந்தால்...:மத்தியில் ஆளும் கட்சி பெரும்பான்மையை இழந்தால், ஆட்சி கவிழும். அதுபோன்ற நிகழ்வில் ஒரே நேரத்தில் தோ்தல் என்ற முன்னெடுப்புக்கு மீண்டும் இடையூறு ஏற்படும். மேலும், ஒரே தோ்தல் என்பது மத்திய மாநில உறவு அடங்கிய கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. ஜனநாயக நடைமுறையை பலவீனப்படுத்துவதாகும்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலையும் ஒரே நேரத்தில் நடத்த முயற்சிப்பது, எழுத்தறிவு இன்னும் பெற வேண்டிய கிராமப்புற மக்கள் மத்தியில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

மக்களவை, சட்டப் பேரவை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதால் பல லட்சம் கோடி ரூபாய் செலவு ஏற்படும்.

எனவே, ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ எனும் நடைமுறையை கடுமையாக திமுக எதிா்க்கிறது. இந்த திட்டம் தொடா்பான ஆய்வை உயா்நிலைக் குழு நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், சட்டத்தின் வழி கொண்டு பொருத்தமான நடவடிக்கையை எடுக்க திமுக தள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com