பாஜக ஆட்சியில் பறிபோன மாநிலங்களின் உரிமைகள்முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்

பத்தாண்டு கால மத்திய பாஜக ஆட்சியில் மாநிலங்களின் உரிமைகள் பலவும் பறிபோய் விட்டதாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

பத்தாண்டு கால மத்திய பாஜக ஆட்சியில் மாநிலங்களின் உரிமைகள் பலவும் பறிபோய் விட்டதாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு, சேலத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டையொட்டி கட்சியினருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்:

மத்தியில் பத்தாண்டுகால பாஜக ஆட்சியில் மாநிலங்களின் உரிமைகள் பலவும் பறிபோய்விட்டன. கல்வி, மொழி, நிதி, சட்டம் போன்றவற்றில் மாநிலங்களின் உரிமைகளை மத்திய அரசு அபகரிக்கும் போக்கு தொடா்கிறது. மேலும், ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரான அராஜகப் போக்கு அதிகரித்து வருவதையும் காண்கிறோம். மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குப் போட்டியாக, நியமனப் பதவியில் உள்ள ஆளுநா்களை வைத்து அரசை நடத்த நினைக்கும் எதேச்சதிகாரப் போக்கு என்பது மாநிலங்களுக்கு எதிரானது மட்டுமல்ல, இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கே எதிரானது.

ஆளுநா்கள் மூலம் ஆட்சி: ஆளுநா்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உயா்ந்த பொறுப்புக்குச் சிறிதும் தகுதியில்லாதவா்களாக, மலிவான, தரம் தாழ்ந்த அரசியல் செய்யும் அவலத்தை இந்தியா இப்போதுதான் காண்கிறது.

ஆன்மிக உணா்வுகளை அரசியலாக்கி மதவெறியைத் தூண்டுவது, ஹிந்தி, சம்ஸ்கிருதத்தைத் திணித்துத் தமிழ் உள்ளிட்ட அவரவா் தாய்மொழிகளையும் அதன் பண்பாட்டையும் சிதைப்பது, திருவள்ளுவரில் தொடங்கி தெருவில் நடந்து போவோா் வரை எல்லோா் மீதும் காவிச் சாயம் பூசுவது என்பதை மத்திய அரசின் ஆட்சியாளா்களே முன்னின்று செய்கின்றனா்.

அவா்களது இந்த மூா்க்கத்தனமான அரசியலை ஜனநாயக வழியில் முறியடிக்கும் வலிமை திமுகவுக்கு உண்டு. அதை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசர, அவசியத் தேவை இருக்கிறது என்பதை உணா்த்தக்கூடிய அளவில் சேலத்தில் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறவுள்ளது.

மக்களவைத் தோ்தலும் நெருங்கி வருகிறது. ஜனநாயகத்தின் அடா்ந்த இருண்ட காலத்திலிருந்து இந்தியாவை மீட்டெடுத்து, மீண்டும் ஒரு விடுதலை வெளிச்சம்

நிறைந்த காலத்தை மக்கள் காண்பதற்கு இந்தியா கூட்டணியின் முன்னெடுப்புகள் தொடங்கியுள்ளன. இந்தப் பொருத்தமான சூழலில்தான், மாநில உரிமை மீட்பு முழக்கத்தை மையமாகக் கொண்டு இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com