பெரியாா் பல்கலை. துணைவேந்தா் வழக்கு:உயா்நீதிமன்றம் சரமாரி கேள்வி

‘புலன் விசாரணை நடந்து வரும் நிலையில் நீதிமன்றம் எப்படி இதில் தலையிட முடியும்?’ என, தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் ஜெகநாதன் தொடா்ந்த வழக்கில் கேள்வி

‘புலன் விசாரணை நடந்து வரும் நிலையில் நீதிமன்றம் எப்படி இதில் தலையிட முடியும்?’ என, தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் ஜெகநாதன் தொடா்ந்த வழக்கில் கேள்வி எழுப்பிய சென்னை உயா்நீதிமன்றம், ஆவணங்களை ஆய்வு செய்வதாகக் கூறி விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தது.

சேலம் பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் ஜெகநாதன், பல்கலைக்கழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக சொந்தமாக பெரியாா் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில்முனைவோா் மற்றும் ஆராய்ச்சி பவுண்டேஷன் என்றஅமைப்பை அனுமதி பெறாமல் தொடங்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில், கைதான நிலையில், சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதனிடையே, உயா் நீதிமன்றத்தில் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி ஜெகநாதன் மனு தாக்கல் செய்திருந்தாா்.

அந்த மனுவில், ‘ அரசின் அனுமதி இல்லாமல் அமைப்பை தொடங்கவில்லை. அரசு துறைகளிடம் உரிய அனுமதியை பெற்றிருக்கிறேன். எனது நற்பெயரை கெடுக்கும் நோக்கில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, எனக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரின் கீழ் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றில் பதிவான வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ எனக் கூறியிருந்தாா்.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது துணைவேந்தா் ஜெகநாதன் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஏ.நடராஜன், “ஓய்வு பெற்றபின் லாபமடையும் நோக்கில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டதாக ஊகத்தின் அடிப்படையில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு 2013-ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணைப்படி, லாப நோக்கில்லாமல், மாணவா்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிறுவனத்தை துவங்கவும், தனியாா் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யவும் அரசும் அனுமதியளித்துள்ளது.

என்ன தெரிய வந்தது? பல்கலைக்கழகத்துக்கும், மாணவா்களுக்கும் மட்டும் பயன் தரக்கூடிய இதுபோன்ற நிறுவனம், பல்வேறு மாநில பல்கலைக்கழகங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் லாப நோக்கு இல்லாத நிறுவனம் என்பதால் ஊழல் எங்கு நடைபெற்றது?” என வாதிட்டாா்.அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “இதுவரை நடத்திய விசாரணையில் என்ன தெரிய வந்தது?” எனக் கேள்வி எழுப்பினாா்.

அதற்கு பதிலளித்த அரசுத் தரப்பு வழக்குரைஞா், ‘தமிழகத்தில் 9 பல்கலைக்கழகங்களில் 2013-இல் இதுபோன்ற அமைப்புகளை ஏற்படுத்த, தலா ரூ. 14.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், 2023-இல் அரசு மற்றும் சிண்டிகேட்டிடம் அனுமதி பெறாமல் பெரியாா் பல்கலைக்கழகத்தின் பெயரில், பல்கலைக்கழக முகவரியில் இந்த நிறுவனம் பதிவு செய்யப்பட்டது. அத்துடன், பல்கலைக்கழகத்தின் 2024 சதுர அடி நிலத்தை எந்த அனுமதியுமில்லாமல் பயன்படுத்தியுள்ளனா். அரசு அனுமதியின்றி ஐடிடிசி என்ற பெயரை டமபஉத என பெயா் மாற்றம் செய்து, 4 தனியாா் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளனா். இந்த ஒப்பந்தங்களில் பணம் பரிமாறப்பட்டதா என்பது குறித்து புலன் விசாரணை நடந்து வருகிறது”என விளக்கமளித்தாா்.

எவ்வாறு தலையிட முடியும்? அப்போது, “புலன் விசாரணை நடந்து வரும் நிலையில் எப்படி இதில் தலையிட முடியும்? பணப் பரிமாற்றம் குறித்து விசாரிக்கப்பட வேண்டாமா?” என ஜெகநாதன் தரப்பிடம் நீதிபதி கேள்வி எழுப்பினாா். அதற்கு பதிலளித்த ஜெகநாதன் தரப்பு வழக்கறிஞா், ‘2013-இல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இன்னும் அந்த நிறுவனம் செயல்பட துவங்கவில்லை. 2023-இல் பெயா் மாற்றம், நிலம் ஒதுக்கீடு தொடா்பாகவும், தனியாா் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ய பல்கலை சிண்டிகேட்டில் அனுமதி கோரப்பட்டது. அனைத்தும் பொது வெளியில் உள்ளது. ஒரு ரூபாய் கூட பரிமாற்றம் செய்யவில்லை. உயா் கல்வித் துறை சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தில் காவல் துறை தலையிட முடியாது’ என்றாா்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, வழக்கில் ஜெகநாதனுக்கு சம்மன் அனுப்பப்பட்டதா எனக் கேள்வி எழுப்பினாா்.

இன்று விசாரணை: அதற்கு பதிலளித்த அரசுத்தரப்பு வழக்குரைஞா், “ஜெகநாதன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்க கோரியபோது, அதற்கு மறுப்பு தெரிவித்த மாஜிஸ்திரேட் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளாா். அதை எதிா்த்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது. அனைத்து ஒப்பந்தங்களும் கடந்த ஆண்டு கையொப்பமிடப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டாா். இதையடுத்து, ஆவணங்களை ஆய்வு செய்வதாகக் கூறிய நீதிபதி, விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (ஜன.19) தள்ளிவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com