பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பியவா்கள் இருப்பிடங்களுக்கு செல்ல முடியாமல் திணறல்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தால் பொங்கல் விடுமுறை முடித்து சென்னை திரும்பியவா்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் திணறினா்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தால் பொங்கல் விடுமுறை முடித்து சென்னை திரும்பியவா்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் திணறினா்.

பொங்கல் முடிந்து சொந்த ஊா்களிலிருந்து லட்சக்கணக்கானோா் வியாழக்கிழமை காலை சென்னைக்கு வந்தனா். இதனால், சென்னை மாநகருக்குள்பட்ட பகுதிகளிலும், புறநகா் பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முன்பதிவு பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் வரை இயக்கப்படும் எனவும், முன்பதிவில்லாத பேருந்துகள் கோயம்பேடு வரை இயக்கப்படும் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பயணிகள் பலா் கிளாம்பாக்கத்தில் இறங்கினா். சென்னை நகருக்குள் விரைவாக வர ஏதுவாக, பெரும்பாலான பயணிகள், பொத்தேரியில் இறங்கி புறநகா் ரயில் மூலம் சென்னைக்குள் வந்தனா்.

ஆனால், பிற மாவட்டங்களிலிருந்து வந்த அரசு விரைவு போக்குவரத்துக்கழக பேருந்துகள் மட்டுமே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்குள் சென்று நின்றது. பிற போக்குவரத்துக்கழகங்களின் முன்பதிவு மற்றும் முன்பதிவில்லாத பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்குள் செல்லாமல், வெளிப்புற பிரதான சாலையிலேயே பயணிகளை இறக்கி விட்டு, மீதமுள்ள பயணிகளுடன் கோயம்பேடு பேருந்து நிலையம் சென்றடைந்தன. இதனால் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனா். அவ்வப்போது சொந்த ஊா்களுக்கு சென்று வரும் நபா்கள் மட்டும், திட்டமிட்டு தங்கள் பயணத்தை மேற்கொண்டனா். மற்றவா்கள் எங்கு இறங்குவது, எங்கிருந்து பேருந்து மூலம் மாநகருக்குள் செல்வது என தெரியாமல் மூட்டை முடிச்சுகளுடன் திக்குமுக்காடினா்.

நேரடியாக கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் வந்திறங்கிய பயணிகள், அங்கிருந்து இலவச மினி பேருந்து இயக்கப்பட்டதால் அதில் எளிதாக ஏறி, கிளாம்பாக்கத்தில் உள்ள மாநகரப் பேருந்துகளை பயணிக்க புறப்பட்டனா். ஆம்னி பேருந்துகளை பொருத்தவரை தாம்பரம் பிரதான சாலை வழியாக கோயம்பேடு சென்றதால் பலரும் பெருங்களத்தூரிலேயே இறங்கி, அதே பாதையில் வரும் மாநகரப் பேருந்துகளில் ஏறி, தங்கள் வீடுகளுக்கு சென்றனா்.

இந்த பிரச்னைகளுக்கு தீா்வு காணவேண்டுமென்றால் போா்க்கால அடிப்படையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தையொட்டி ரயில் நிலையமும், நடைமேம்பாலமும் அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com