டிடி பொதிகை தொலைக்காட்சி பெயர் மாறுகிறது

டிடி பொதிகை தொலைக்காட்சி அலைவரிசையின்  பெயர் மாற்றி அமைக்கப்படுகிறது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

கோவை: டிடி பொதிகை தொலைக்காட்சி அலைவரிசையின்  பெயர் மாற்றி அமைக்கப்படுகிறது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

டிடி பொதிகை தொலைக்காட்சியின் பெயர் டிடி தமிழ் என மாற்றப்படுவதாகவும், இன்று சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, டிடி தமிழ் அலைவரிசையை தொடக்கி வைக்கவிருக்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து  கொள்வதற்காக, வருகை புரிந்த மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், தை மாதம் பிறந்தது, தமிழகத்தில் சூழ்ந்து இருக்கின்ற இருள் விலகி ஒளிமயமான தமிழகம் வர இருக்கிறது என தெரிவித்தார். நாளை சென்னை வரும் பிரதமர் மோடி கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் துவக்க விழாவில் கலந்து கொள்வதாகவும் அதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும்  நாளைய தினம் ஒரு முக்கிய நிகழ்வாக டிடி பொதிகை டிடி தமிழ் என புதிய மாற்றத்துடன் மக்கள் விரும்பும் வகையில் மாற்றி அமைக்கப்பட்ட ஒரு புதிய அலைவரிசையாக பிரதமர் துவக்கி வைக்க உள்ளார் என்றார். 

அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் திமுக எவ்வளவு பிற்போக்குத்தனமாக இருக்கிறார்கள் என்பதை காட்டுவதாகவும் இந்தியாவில் உள்ள மக்களின் 500 ஆண்டு கால கனவு, எண்ணம், தியாகங்கள் எல்லாம் நிறைவேறி ஒவ்வொரு இந்திய குடிமகனும் பாரத தேசத்தினரும் எதிர்பார்க்கின்ற திருவிழாவை கொண்டாட நாடு தயாராக இருப்பதாக தெரிவித்த அவர் இதில் திமுகவினர் இன்னும் பிற்போக்கு தனத்துடன் பேசிக் கொண்டிருப்பதை மக்கள் புறக்கணிப்பார்கள் என்றார்.

நாளை பிரதமர் வருகிறார், தமிழகத்தில் இருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊழல் ஆட்சி என்ற இருள் விலக வேண்டும். அதற்கான நேரம் வந்துவிட்டது என சாடினார். 
கோவையில் பாஜக முக்கிய நிர்வாகிகள் குவிந்திருப்பது குறித்த கேள்விக்கு அதைப்பற்றி பிறகு விளக்கம் அளிக்கப்படும் என தெரிவித்துச் சென்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com