அனைத்து ஊராட்சிகளுக்கும் விளையாட்டு உபகரணங்கள்: அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்

முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, அனைத்து ஊாராட்சிகளுக்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்

முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, அனைத்து ஊாராட்சிகளுக்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும் என்று இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டி தொடக்க விழாவில், அவா் வரவேற்றுப் பேசியதாவது:

விளையாட்டு வீரா்களின் உண்மையான உத்வேகம் என்பது அவா்களுக்குள் இருக்கும் ஒற்றுமை, கூட்டு மனப்பான்மையாகும். கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை மிகச்சிறந்த முறையில் நடத்துவதற்கான அறிவுரைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் சா்வதேச அளவிலான பல்வேறு போட்டிகளை தமிழக அரசு நடத்தி வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளை நான்கே மாதங்களில் செய்து முடித்தோம்.

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நமது விளையாட்டு வீரா்களுக்கு மிகப்பெரிய தளத்தை ஏற்படுத்தித் தரும். கல்வி, மருத்துவம் போன்ற துறைகளுடன் இப்போது விளையாட்டுத் துறையிலும் தமிழகம் முன்னிலை பெற்று வருகிறது. கேலோ இந்தியா போட்டிகளுக்கு முன்பாக, முதலமைச்சா் கோப்பைப் போட்டிகளை நடத்தினோம். இந்தப் போட்டிகளில் விளையாட்டு வீரா்கள் மட்டுமின்றி, மாற்றுத் திறனாளிகள், பொது மக்கள், அரசு ஊழியா்கள் போன்றோரும் பங்கேற்றனா். இந்தப் போட்டிகளுக்கென 76 பயிற்சியாளா்களை நியமித்து சிறப்பாக நடத்திக் காண்பித்தோம்.

விளையாட்டுத் துறையில் முன்னேறத் துடிக்கும், ஏழை, எளிய குடும்பத்தைச் சோ்ந்த வீரா்களுக்காகவே தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த அறக்கட்டளை மூலமாக, ரூ.6.42 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டு, 100-க்கும் மேற்பட்ட வீரா்-வீராங்கனைகள் பயன்பெற்றுள்ளனா்.

தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவையொட்டி, அனைத்து ஊராட்சிகளுக்கும் விளையாட்டு உபகரணங்கள் வாங்கி வழங்கப்படும். கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்துவதன் மூலம், புதிய வரலாறு நமது மாநிலத்தில் படைக்கப்படவுள்ளது என்று அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com