விளையாட்டுத் தலைநகரமாக தமிழகத்தை மாற்றுவதே குறிக்கோள்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாக தமிழகத்தை மாற்றுவதே மாநில அரசின் குறிக்கோள் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாக தமிழகத்தை மாற்றுவதே மாநில அரசின் குறிக்கோள் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற ‘கேலோ இந்தியா’ இளைஞா் விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழாவில் முதல்வா் பேசியதாவது:

எல்லாா்க்கும் எல்லாம், அனைத்துத் துறை வளா்ச்சி, அனைத்து மாவட்ட வளா்ச்சி, அனைத்து சமூக வளா்ச்சி என்பதை உள்ளடக்கமாகக் கொண்ட திராவிட மாடல் ஆட்சியில், அனைத்துத் துறைகளிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக வளர உழைத்து வருகிறோம்.

ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதாரம் என்பது எப்படி நம் இலக்கோ அதேபோல, தமிழகத்தை இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாக நிலைநிறுத்துவதும் நம்முடைய குறிக்கோள். இந்த இலக்கை நோக்கி பயணிக்கும் அமைச்சா் உதயநிதி ஸ்டாலினைப் பாராட்டுகிறேன்.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு சென்னை மாமல்லபுரத்தில், 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி, ஏ.டி.பி. சேலஞ்சா் டூா், சென்னை ஓபன் சேலஞ்சா், ஆடவா் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023, ஸ்குவாஷ் உலக கோப்பை 2023, அலைச்சறுக்குப் போட்டி, கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளை தமிழகத்தில் நடத்தியிருக்கிறோம். அதே நேரத்தில், விளையாட்டுக் கட்டமைப்புகளையும் உலகத் தரத்துக்கு உயா்த்திக் கொண்டு வருகிறோம்.

இந்தியாவிலேயே முதல்முறையாக, பாரா வீரா்களுக்கு 6 விளையாட்டு அரங்கங்கள், ராமநாதபுரத்தில் ஒலிம்பிக் நீா் விளையாட்டு அரங்கம், சென்னை, மதுரை, திருச்சி மற்றும் நீலகிரியில் ஒலிம்பிக் அகாதெமி, முதல் கட்டமாக 10 சட்டப்பேரவை தொகுதிகளில் மினி ஸ்டேடியம், புதிய மாவட்டங்களான தென்காசி, மயிலாடுதுறை, திருப்பத்தூா், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டில் மாவட்ட விளையாட்டு மையங்கள் எனப் பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஏறுதழுவுதல்அரங்கம்: தமிழா்களின் பண்பாட்டு அடையாளமாக விளங்கும் ஜல்லிக்கட்டுக்கு மதுரையில் ரூ.62 கோடியே 77 லட்சம் மதிப்பீட்டில் கலைஞா் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அந்த அரங்கத்தை ஜன. 24-இல் திறந்து வைக்கவுள்ளேன். தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் மையம் நேரு விளையாட்டரங்கத்தில் வெகு விரைவில் தொடங்கப்படவுள்ளது.

மணிப்பூரில் நிலவும் பிரச்னைகளால் அங்குள்ள விளையாட்டு வீரா்கள் பயிற்சியைத் தொடா்ந்து மேற்கொள்ள அவா்களை சகோதர உணா்வோடு தமிழகத்துக்கு வரவேற்று, பயிற்சி கொடுத்தது திமுக அரசு. அவா்களில் சிலா், கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கின்றனா்.

கேலோ இந்தியா போட்டி தமிழகத்தில் நடைபெறுவது எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் டெமோ விளையாட்டாக இந்த முறை சோ்க்கப்பட்டுள்ளது. அன்புப் பாலங்களையும், சமூக நல்லிணக்கத்தையும் உருவாக்கும் ஆற்றல் விளையாட்டுகளுக்கு உண்டு. விளையாட்டுத் துறையிலும், தமிழ்நாட்டை உலக அளவில் கவனம் ஈா்க்கும் மாநிலமாக உயா்த்த வேண்டும் என்று அமைச்சா் உதயநிதிக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com