போக்குவரத்துக் கழகங்களுக்கு 100 புதிய பேருந்துகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தாா்

அரசு போக்குவரத்துக் கழகங்களுக்காக வாங்கப்பட்ட 100 புதிய பேருந்துகளை மக்களின் பயன்பாட்டுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.
போக்குவரத்துக் கழகங்களுக்கு 100 புதிய பேருந்துகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தாா்

அரசு போக்குவரத்துக் கழகங்களுக்காக வாங்கப்பட்ட 100 புதிய பேருந்துகளை மக்களின் பயன்பாட்டுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் ரூ.645 கோடியில் புதிதாக 1,666 பேருந்துகள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் முதல் கட்டமாக 100 பிஎஸ் - 6 பேருந்துகள் வாங்கப்பட்டன. காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வகையிலான அந்த பேருந்துகள், சென்ட்ரல் மாநகரப்போக்குவரத்துக்கழகப் பணிமனையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மஞ்சள் நிறத்திலான அந்த பேருந்துகள் நவீன தொழில்நுட்பத்தில் உருவானவை. இந்தப் பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக முதல்வா் மு.க.ஸ்டாலின்சனிக்கிழமை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

இது தொடா்பாக தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

2022 அக்டோபா் 19-இல் சட்டப்பேரவையில் 110-ஆவது விதியின் கீழ் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் 1,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்றும், அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள 1000 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும் என்றும் அறிவித்தாா்.

2023-24-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், ரூ.500 கோடி மதிப்பீட்டில் 1,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்றும், அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள 500 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதோடு நீலகிரி மாவட்டத்துக்காக மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 16 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய அரசாணை வெளியிடப்பட்டது.

அந்த அறிவிப்புகளின்படி, , ரூ.634.99 கோடி மதிப்பீட்டில் புதிதாக 1,666 பிஎஸ் - 6-ரகப் பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் முதல் கட்டமாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம், கோயம்புத்தூா் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு தலா 40 பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 10 புதிய பேருந்துகளும், திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகம், மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு தலா 5 புதிய பேருந்துகளும் என மொத்தம் 100 புதிய பிஎஸ்- 6 பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக முதல்வா் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். எஞ்சியுள்ள பேருந்துகள் அடுத்த இரண்டு மாதங்களில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளன என்று அதில் கூறப்பட்டுள்ளது.

போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, மேயா் ஆா். பிரியா, தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா, போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலா் க.பணீந்திர ரெட்டி உள்ளிட்ட உயரதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com