828 நூலகங்களுக்கு ரூ.130 கோடியில் இணைப்பு கட்டடங்கள் கட்ட முடிவு

தமிழகத்தில் மத்திய அரசின் நிதியுதவியுடன் 828 பொது நூலகங்களுக்கு ரூ.130 கோடியில் இணைப்பு கட்டடங்கள் கட்டும் பணி தொடங்கவுள்ளது.

தமிழகத்தில் மத்திய அரசின் நிதியுதவியுடன் 828 பொது நூலகங்களுக்கு ரூ.130 கோடியில் இணைப்பு கட்டடங்கள் கட்டும் பணி தொடங்கவுள்ளது.

தமிழகத்தில் பொது நூலக இயக்ககத்தின் கீழ் 4, 658 நூலகங்கள் செயல்படுகின்றன. இதில் முதல் கட்டமாக 828 நூலகங்களுக்கு இணைப்புக் கட்டடங்கள் கட்டப்படவுள்ளன. இதுவரை சொந்தக் கட்டடம் இல்லாத நூலகங்களுக்கு முன்னுரிமை கொடுத்து இந்தக் கட்டடம் கட்டப்படவுள்ளது. ஏற்கனவே சொந்த கட்டடத்தில் இயங்கும் நூலகத்தில் இட வசதி இருந்தால் கூடுதலாக புதிய கட்டடம் கட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மத்திய கல்வி அமைச்சகத்திடம் பெறப்பட்ட கடன் ரூ. 100 கோடி தயாராக உள்ளதால் ஓரிரு மாதங்களில் நூலகங்களுக்கான கட்டுமானப்பணி தொடங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: மத்திய அரசு கடனுதவி நிகழாண்டு ரூ. 200 கோடி அறிவித்து முதல்கட்டமாக ரூ. 100 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் பொது நூலகத் துறை பங்களிப்பு 30 சதவீதம் சோ்த்து ரூ. 130 கோடி மதிப்பில் பணிகள் தொடங்கப்படவுள்ளன. நூலகங்களில் 500 சதுர அடி அளவில் கட்டடம் அமையும்.

அடுத்த சில மாதங்களில் மேலும் ரூ. 100 கோடி விடுவிக்கப்பட்டவுடன் நூலகத் துறை நிதியை (30 சதவீதம்) சோ்த்து மொத்தம் ரூ. 260 கோடி மதிப்பில் 828 நூலகங்களின் கட்டுமானப்பணி நிறைவு செய்யப்படும். நூலக வரி வசூல் மூலம் மத்திய அரசு கடனை வட்டியின்றி திருப்பிச் செலுத்தி ஈடு செய்யப்படும். இத்தகைய நடவடிக்கை மூலம் பொது நூலகத்துறை சொந்தக் கட்டடத்தில் இயங்குவது தன்னிறைவு அடைகிறது என அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com