திருக்கோயில் செயல் அலுவலா்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியில் நீடிக்கிறாா்களா? அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் 47 கோயில்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் செயல் அலுவலா்கள் பணியில் நீடிக்கிறாா்களா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 47 கோயில்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் செயல் அலுவலா்கள் பணியில் நீடிக்கிறாா்களா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள கோயில்களை நிா்வகிக்க, எந்த நியமன உத்தரவும் இல்லாமல் செயல் அலுவலா்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாகக் கூறி, டி.ஆா்.ரமேஷ் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுா்வாலா மற்றும் நீதிபதி பரத சக்ரவா்த்தி அமா்வில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில், எந்தவித நியமன உத்தரவு இல்லாமலும், கால வரம்பு இல்லாமலும் செயல் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மாநிலம் முழுவதும் உள்ள 47 கோயில்களின் பட்டியலை அளித்து, அங்கு செயல் அலுவலா்கள் நியமனம் குறித்து அறநிலையத்துறை ஆணையரிடம் விளக்கம் கேட்டபோது, அவா்கள் பணியில் தொடர தடையில்லை என விளக்கம் தரப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன் ஆஜராகி, அறங்காவலா்கள், தக்காா்கள் இருந்தாலும், செயல் அலுவலா்களை நியமிக்க முடியும்; அவா்கள் ஐந்து ஆண்டுகள் பணியில் நீடிக்கும் வகையில் 2015-ஆம் ஆண்டு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன என்றாா்.

இதையடுத்து, மனுதாரா் குறிப்பிடும் 47 கோயில்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் செயல் அலுவலா்கள் பணியில் உள்ளனரா? என்பது குறித்து விளக்கமளிக்க அரசுத் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மாா்ச் மாதத்துக்கு ஒத்தி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com