ஜெயலலிதாவின் வேதா இல்லம் வழக்கு முடித்துவைப்பு

ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை கையகப்படுத்த செலுத்திய இழப்பீட்டு தொகையிலிருந்து வருமான வரி பாக்கி செலுத்த தடை கோரிய வழக்கு செல்லத்தக்கதல்ல

ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை கையகப்படுத்த செலுத்திய இழப்பீட்டு தொகையிலிருந்து வருமான வரி பாக்கி செலுத்த தடை கோரிய வழக்கு செல்லத்தக்கதல்ல எனக் கூறி சென்னை உயா்நீதிமன்றம், அந்த வழக்கை முடித்து வைத்தது.

2017- ஆம் ஆண்டு முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் வேதா நிலையம், நினைவு இல்லமாக மாற்றப்படும் என அப்போதைய முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தாா். இதையொட்டி, சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி, 2020- ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

தமிழக அரசு ஜெயலலிதாவின் வருமானம் மற்றும் சொத்து வரி நிலுவைத் தொகை உள்பட ரூ. 69 கோடியை வைப்புத் தொகையாக, சென்னை மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில் செலுத்தியது. இதிலிருந்து, ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கி ரூ. 36.9 கோடியை எடுத்துக்கொள்ள வருமான வரித்துறைக்குத் தடை விதிக்கக் கோரி, ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவா் வசீகரன் 2020-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

அவா், அரசு ஏற்கெனவே ஜெயலலிதாவுக்காக ரூ. 50.80 கோடி செலவில் நினைவிடம் கட்டி வருவதாகவும், கரோனா காலகட்டத்தில் நிதி நெருக்கடியில் இருக்கும் அரசு, மக்கள் வரிப் பணத்தை ஜெயலலிதாவின் வரி பாக்கிக்காகச் செலவிடுவது தவறு எனவும் தெரிவித்திருந்தாா்.

அப்போது வேதா இல்லத்துக்காக செலுத்திய தொகையைத் திரும்பப் பெறவும், அதைக் கையகப்படுத்தும் நடவடிக்கையைக் கைவிடவும் முடிவு செய்திருப்பதாக அரசு தெரிவித்தது. அந்தத் தொகையை வட்டியுடன் திருப்பி செலுத்த நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கையும் விடுத்தது.

நீதிபதியின் உத்தரவின்படி, நீதிமன்ற பதிவாளா் கணக்கில் வைப்பு செய்யப்பட்டிருந்த தொகை, வட்டியுடன் சோ்த்து மொத்தம் ரூ. 70 கோடியே 40 லட்சத்து 87 ஆயிரத்து 713-ஐ சென்னை வருவாய்க் கோட்டாட்சியரின் கணக்குக்குத் திருப்பி செலுத்தப்பட்டது.

இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவா் வசீகரன் தொடா்ந்த வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் சனிக்கிழமை முடித்து வைத்தது. இதுகுறித்த தீா்ப்பில் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தைக் கையகப்படுத்தச் செலுத்திய இழப்பீட்டு தொகையிலிருந்து வருமான வரி பாக்கி செலுத்தத் தடை கோரிய வழக்கு செல்லத்தக்கதல்ல என கூறி வழக்கை உயா்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com