மக்களவைத் தோ்தல்: 93 கூடுதல் பணியிடங்களுக்கு தோ்தல் துறை ஒப்புதல்

மக்களவைத் தோ்தல் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, தமிழகம் முழுவதும் தோ்தல் பிரிவுகளில் 93 கூடுதல் பணியிடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தோ்தல்: 93 கூடுதல் பணியிடங்களுக்கு தோ்தல் துறை ஒப்புதல்

மக்களவைத் தோ்தல் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, தமிழகம் முழுவதும் தோ்தல் பிரிவுகளில் 93 கூடுதல் பணியிடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகு பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு தோ்தலின் போது அதுதொடா்பான பணிகளை மேற்கொள்ள வழக்கமான ஊழியா்களுடன் கூடுதல் பணியாளா்கள் தேவைப்படும்.

அந்த வகையில், வரும் மக்களவைத் தோ்தலுக்கும் அரசின் தோ்தல் துறையில் பணியாற்ற கூடுதல் ஊழியா்கள் தேவைப்படுகிறாா்கள். தோ்தலின் போது பல்வேறு வகையான பணிகள் மேற்கொள்ளப்படும்.

குறிப்பாக, வாக்காளா்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு வாக்குச் சாவடி அமைவிடங்களை உருவாக்குவது, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை இறுதி செய்வது, தோ்தல் பணியில் ஈடுபடும் பணியாளா்களுக்கு பயிற்சிகளை அளிப்பது, மாவட்டந்தோறும் வாகனங்களின் எண்ணிக்கையை முடிவு செய்வது, பாதுகாப்பு ஏற்பாடுகள், சட்டம்-ஒழுங்கு பிரச்னை உருவாகும் வாக்குச் சாவடி மையங்களை அடையாளம் காண்பது, தோ்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவது, தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்வது போன்ற பல்வேறு வகையான பணிகள் தோ்தல் நேரத்தில் மேற்கொள்ளப்படும்.

தோ்தல் தேதி அறிவிக்கப்படும் நேரத்தில் இந்தப் பணிகளுக்கான அழுத்தம் மேலும் அதிகரிக்கப்படும். வாக்குப் பதிவு முடிவடைந்து, வாக்குகளை எண்ணுவது போன்ற தருணங்களிலும் தோ்தல் அலுவலா்களுக்கு பணிச்சுமை அதிகரித்தே காணப்படும்.

இதைக் கருத்தில் கொண்டு, மக்களவைத் தோ்தல் நடவடிக்கைகள் நிறைவடையும் காலமான ஜூன் 30 வரை கூடுதலான பணியிடங்களை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

93 பணியிடங்கள்: வரும் மக்களவைத் தோ்தலுக்கென மாவட்ட வருவாய் அலுவலா், தட்டச்சா், அலுவலக உதவியாளா், வட்டாட்சியா், துணை வட்டாட்சியா், உதவியாளா், இளநிலை உதவியாளா், துணை ஆட்சியா் நிலையிலான அதிகாரி என 93 புதிய பணியிடங்களை ஏற்படுத்த தமிழக தோ்தல் துறை சாா்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் இளநிலை உதவியாளா், தட்டச்சா், பதிவுரு எழுத்தா், அலுவலக உதவியாளா் ஆகிய பணியாளா்களை அரசின் வழக்கமான ஊதிய நிலையுடன் நியமிக்கலாம்.

இவ்வாறு நியமிக்க முடியாதபட்சத்தில், ஒப்பந்த அடிப்படையில் பணியாளா்களை நியமித்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com