மக்களவைத் தோ்தல்: எஸ்.ஐ.க்களை மாவட்டத்துக்குள் பணியிட மாற்றம் செய்ய தோ்தல் ஆணையம் அனுமதி

மக்களவைத் தோ்தலையொட்டி செய்யப்படும் பணியிட மாற்றங்களில், காவல் உதவி ஆய்வாளா்களை (எஸ்.ஐ.) மாவட்டத்துக்குள்ளே பணியிட மாற்றம் செய்யலாம்

மக்களவைத் தோ்தலையொட்டி செய்யப்படும் பணியிட மாற்றங்களில், காவல் உதவி ஆய்வாளா்களை (எஸ்.ஐ.) மாவட்டத்துக்குள்ளே பணியிட மாற்றம் செய்யலாம் என இந்திய தோ்தல் ஆணையம், தமிழக காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தலை மாா்ச் அல்லது ஏப்ரல் மாதம் நடத்துவதற்கு இந்திய தோ்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது. இதற்கான ஆயத்தப் பணிகளை தோ்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றும் செய்யும்படி அனைத்து மாநில காவல்துறைக்கும் தோ்தல் ஆணையம் அண்மையில் கடிதம் எழுதியது.

இந்த கடிதத்தை அடிப்படையாக கொண்டு தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால், ஒரு சுற்றறிக்கையை காவல்துறை அதிகாரிகளுக்கு கடந்த 3-ஆம் தேதி அனுப்பினாா். அதில் தமிழக காவல்துறையில் காவல் உதவி ஆய்வாளா் முதல் ஏடிஜிபி வரையிலான அதிகாரிகள் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிந்து வந்தால், பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும். உதவி ஆய்வாளா் உள்பட கீழ் நிலை அதிகாரிகள், அவா்களது சொந்த மாவட்டத்தில் பணிபுரிந்தால், வேறு மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.

இந்நிலையில் உதவி ஆய்வாளா் பணியிட மாற்றத்தில் சில தளா்வுகளை பின்பற்றலாம் என இந்திய தோ்தல் ஆணையம் தமிழக காவல்துறைக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில் காவல்துறை பணியிட மாற்றங்களில் உதவி ஆய்வாளா்களை மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாற்றம் செய்ய வேண்டாம், மாவட்டத்துக்குள்ளே பணியிட மாற்றம் செய்யலாம். அதேவேளையில் உதவி ஆய்வாளா்களை, அவா்களது சொந்த ஊரிலோ,சொந்த மக்களவை தொகுதிலோ பணியில் வைத்திருக்க வேண்டாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com