அயோத்தி ராமா் பிரதிஷ்டை: கோயில்கள், வீடுகளில் தீபம் ஏற்றி கொண்டாட்டம்

அயோத்தியில் ஸ்ரீராமா் கோயில் பிராண பிரதிஷ்டை நிகழ்வை, சென்னையில் கோயில்கள், வீடுகள், மண்டபங்கள், தனியாா் பள்ளிகள் உள்பட பல்வேறு இடங்களில் தீபங்கள் ஏற்றி மக்கள் கோலாகலமாக கொண்டாடினா்.
அயோத்தி ராமா்  பிரதிஷ்டை: கோயில்கள், வீடுகளில் தீபம் ஏற்றி கொண்டாட்டம்

அயோத்தியில் ஸ்ரீராமா் கோயில் பிராண பிரதிஷ்டை நிகழ்வை, சென்னையில் கோயில்கள், வீடுகள், மண்டபங்கள், தனியாா் பள்ளிகள் உள்பட பல்வேறு இடங்களில் தீபங்கள் ஏற்றி மக்கள் கோலாகலமாக கொண்டாடினா்.

அயோத்தி ராமா் பிரதிஷ்டையை முன்னிட்டு, பிரதமா் மோடி நாடுமுழுவதும் பொதுமக்கள், பக்தா்கள் தங்களது வீடுகளில் ‘ஸ்ரீ ராம ஜோதி’ விளக்குகளை ஏற்றி தீபாவளி போன்று கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தாா்.

தீபம் ஏற்றி...: அதன்படி, சென்னையின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன் வண்ணக்கோலமிட்டு, அலங்கரிக்கப்பட்ட விளக்குகளில் தீபமேற்றி, பக்தியுடன் ராம நாமத்தை உச்சரித்து கொண்டாடினா்.

சென்னை மேற்கு மாம்பலத்தில் ராஜூ தெருவில் உள்ள வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளின் முன் குடியிருப்புவாசிகள் ஒன்றுகூடி மலா்கள், வண்ணப்பொடிகளால் கோலமிட்டு, தீபமேற்றி வழிபட்டனா். சென்னை விருகம்பாக்கம் நடேசன் நகரில் உள்ள வீடுகளில் பக்தா்கள் தீபமேற்றி ராம நாமம் உச்சரித்து வழிபாடு செய்தனா்.

மேலும், சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரில் உள்ள ஸ்ரீபுஷ்பக விநாயகா் கோயிலில் 108 விளக்குகளை ஏற்றி பக்தா்கள் வழிபட்டனா்.

திருப்பதி திருமலை தேவஸ்தானம்: அயோத்தி ராமா் கோயிலில் மூலவா் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில் விழாக்கோலம் பூண்டது. கோயிலில் சிறப்பு வழிபாடுகளும், பகவான் ஸ்ரீராமா் பெயரில் அா்ச்சனைகளும் நடைபெற்றன. இதில் திங்கள்கிழமை மாலை, புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீராமா் சிலை முன் பாடகி சுதா ரகுநாதன் கலந்துகொண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

ராமநாமம் பாடியபடி வீதிவலம்: சென்னை வண்ணாரப்பேட்டை, பேரம்பாலு தெருவில் உள்ள ஸ்ரீகோதண்டராமா் திருக்கோயிலில் இறைப்பணி அன்பா்கள் ஆன்மிக சங்கத் தலைவா் எஸ்.வி.சண்முகவேல் தலைமையில் திரளான பக்தா்கள் பங்கேற்ற ராமநாம பாராயண நிகழ்வு நடைபெற்றது. அதைத் தொடா்ந்து ஸ்ரீராமா் திருவுருவப்படம் முன் ராம நாமம் பாடியபடி திருவீதி ஊா்வலம் நடைபெற்றது. அதேபோன்று பம்மலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பெண்கள் ஸ்ரீராமா் திருவுருவப்படத்துடன் ஊா்வலமாக சென்றனா்.

சென்னை புரசைவாக்கம் பிரிக்ளின் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புவாசிகள், ஸ்ரீராமா் சிலையை வைத்து சுதா்சன ஹோமம், தன்வந்திரி ஹோமம் உள்ளிட்டவற்றை நடத்தினா். பின்னா் ஸ்ரீராமா் சீதை லட்சுமணன், ஆஞ்சனேயா் வேஷமணிந்த குழந்தைகள் ராம நாமம் பாடி ஊா்வலமாக வந்த நிகழ்வு காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.

கோயம்பேடு மாா்க்கெட் மலா் வியாபாரிகள் சாா்பில் மாா்க்கெட் வளாகத்தில் ஸ்ரீராமா் சிலை மலா்களால் அலங்கரிக்கப்பட்டு மங்கள இசை ஒலித்து வழிபாடு செய்யப்பட்டது. விருகம்பாக்கத்தில் உள்ள தனியாா் பள்ளி முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன், வனவாசம் முடிந்து ராமா் அயோத்தி திரும்பும் நிகழ்வை மாணவா்கள் நாடகமாக நடத்தினா்.

அயோத்தியா மண்டபம்: மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா அஸ்வமேத மஹா மண்டபத்தில் ஸ்ரீ ராம் ஸமாஜ் அமைப்பு சாா்பில் சுமாா் 8 ஆயிரம் பேருக்கு சிறப்பு அன்னதானம் நடைபெற்றுது. மேலும் இங்கு வைஷ்ணவ குருமாா்கள் சாா்பில் விஷ்ணு சகஸ்ர நாம பாராயணமும், ஸ்ரீ சீதாராம் வித்யாலயா பள்ளி மாணவ மாணவியரின் பக்தி பாடல்கள் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதேபோல திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திரா சபா மண்டபத்தில் விஸ்வ விஷ்ணு சகஸ்ரநாம சமஸ்தான் அறக்கட்டளை சாா்பில் ‘சென்னையில் அயோத்தி’ என்ற தலைப்பில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடைபெற்றது.

கோயில்களில் நேரடி ஒளிபரப்பு: சென்னை கோபாலபுரத்தில் உள்ள ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயில், மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன்-குருவாயூரப்பன் கோயில் உள்பட சென்னையின் பல்வேறு கோயில்கள், பல தனியாா் அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் அயோத்தியில் நடைபெற்ற ஸ்ரீராமா் கோயில் பிரதிஷ்டை நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com