மத்திய பாஜக அரசுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்: கனிமொழி எம்.பி.

மத்திய பாஜக அரசுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்: கனிமொழி எம்.பி.

தமிழகத்துக்கு உரிய நிதியை வழங்காத மத்திய பாஜக அரசுக்கு மக்களவைத் தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்று திமுக துணைப் பொதுச் செயலர் கனிமொழி கூறினார்.

தமிழகத்துக்கு உரிய நிதியை வழங்காத மத்திய பாஜக அரசுக்கு மக்களவைத் தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்று திமுக துணைப் பொதுச் செயலர் கனிமொழி கூறினார்.

சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் கனிமொழி பேசியதாவது:
மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்தை பார்க்கிறது. மாநில அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்குவதில்லை. 
தென்மாவட்டங்களில் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து பிரதமரைச் சந்தித்து நிவாரணம் கோரினோம். மத்திய அமைச்சர்கள் இங்கு வந்து ஆய்வு செய்த போதும் இதுவரை தமிழகத்துக்கு உரிய நிதியை வழங்கவில்லை. 
வரும் மக்களவைத் தேர்தலில் மத்திய அரசுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்ட வேண்டும். 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும் என்றார்.     
திருச்சி என்.சிவா: திமுக தலைவராக இருந்த கருணாநிதி எடுத்த முடிவு, இளைஞர் படையை உருவாக்கி திமுகவை முன்னெடுத்துச் செல்வது என்பதாகும். 

கடந்த 1967 ஜன.21-இல் அப்போது முதல்வராக இருந்த அண்ணா, என்சிசியில் உள்ள ஹிந்தி எழுத்துகளை அகற்ற வேண்டும் என சட்டப் பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றினார். 

இதனை மத்திய அரசு கட்டாயப்படுத்த முயன்றால் என்சிசி என்ற அமைப்பே தமிழகத்தில் இருக்காது என்று தைரியமுடன் கூறினார். 
அதேபோல்தான், சட்டப் பேரவையில் ஆளுநர் புதிய சொற்களைப் பதிவு செய்து ஆளுநர் உரையை வாசித்தார். 

இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவைத் தலைவர் என்ன வழங்கியுள்ளாரோ, அதை மட்டுமே வாசிக்க வேண்டும் என்று தைரியமாகக் கூறினார்.

தற்போது பகைவர்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. அதனை எதிர்க்க திமுக இளைஞர்கள் ஒன்றிணைய வேண்டும் என்றார். 

அமைச்சர் தங்கம் தென்னரசு: 2017 முதல் தமிழகத்துக்கு முறைப்படி வழங்க வேண்டிய ஜிஎஸ்டி தொகையை மத்திய அரசு வழங்கவில்லை. தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு ரூ. 6.50 லட்சம் கோடி ஜி.எஸ்.டி.யாக வழங்கப்படுகிறது.

மத்திய அரசு திரும்ப வழங்கும் தொகை ரூ. 2.50 லட்சம் கோடி. உத்தரபிரதேச அரசு வழங்கும் ஜிஎஸ்டி தொகை ரூ. 2.70 லட்சம் கோடி. ஆனால், அவர்களுக்கு வழங்கப்படும் தொகை ரூ. 11 லட்சம் கோடி. மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுகிறது.

அண்மையில், சென்னையில் மிக்ஜம் புயல் பாதிப்பு, தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அவற்றை சரிசெய்ய நிவாரணமாக ரூ. 22 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் கோரிக்கை வைத்தார். 

டி.ஆர்.பாலு தலைமையில் எம்.பி.க்கள் குழு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து நிதியை வழங்குமாறு கோரிக்கை மனுவை அளித்தது. ஆனால், இதுவரை மத்திய அரசு ஒருபைசா கூட தமிழகத்துக்கு வழங்கவில்லை. 

வரும் மக்களவைத் தேர்தல் மத்திய அரசுக்கு பாடம் புகட்டும் வகையில் அமைந்தாக வேண்டும் என்றார் அவர். 

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி: குலக்கல்வி முறையை பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் எதிர்த்தனர்.  அதேபோல, மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு அமல்படுத்த முயன்றால், அதனை எதிர்த்து திமுக தொடர்ந்து போராடும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com