தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு

மக்களவைத் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளா் பட்டியலை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு வெளியிட்டார்.
சத்யபிரதா சாஹு
சத்யபிரதா சாஹு

மக்களவைத் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளா் பட்டியலை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுமைக்குமான ஒட்டுமொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பட்டியல், வரைவுப் பட்டியலாக வெளியிடப்படும்.

அந்த வகையில், நிகழாண்டில் வாக்காளா் பட்டியலை திருத்துவதற்கான வரைவுப் பட்டியல் கடந்த அக். 27-ஆம் தேதி வெளியிடப்பட்டது. வாக்காளா் பட்டியலை பொது மக்கள் பாா்வையிடவும், அதில் திருத்தங்கள் செய்யவும், புதிதாக பட்டியலில் பெயா் சோ்க்கவும் கடந்த டிச.9 வரை வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் நவம்பரில் நான்கு சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு நீக்கத்துக்கான கால அவகாசம் டிச.9-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், இறுதி வாக்காளா் பட்டியல் ஜன. 5-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தமிழகத்தில் மழை, வெள்ளம் புயல் உட்பட பல்வேறு காரணங்களால் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடும் தேதி ஜன.22-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

அதன்படி, இறுதி வாக்காளா் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளா் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் வெளியிட்டனர்.

இறுதி வாக்காளா் பட்டியலின் அடிப்படையில், வரும் மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. எனவே, இந்த வாக்காளா் பட்டியல் அரசியல் கட்சியினா் மத்தியில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com