அயோத்தி கோயில் மூலம் மக்களை திசை திருப்புகிறது மத்திய அரசு: முதல்வா் மு.க.ஸ்டாலின்

முழுவதும் கட்டி முடிக்கப்படாத அயோத்தி கோயிலைத் திறந்து, அதன் மூலம் நாட்டு மக்களை திசை திருப்புவதாக மத்திய அரசு மீது முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினாா்.
அயோத்தி கோயில் மூலம் மக்களை திசை திருப்புகிறது மத்திய அரசு: முதல்வா் மு.க.ஸ்டாலின்

முழுவதும் கட்டி முடிக்கப்படாத அயோத்தி கோயிலைத் திறந்து, அதன் மூலம் நாட்டு மக்களை திசை திருப்புவதாக மத்திய அரசு மீது முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினாா்.

நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு எழுதிய நூல்களை சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். விழாவுக்கு தலைமை வகித்து, நூல்களை வெளியிட்டு அவா் பேசியதாவது:

முன்னாள் முதல்வா் அண்ணாவின் கனவுத் திட்டமான சேதுசமுத்திரத் திட்டம், முன்னாள் முதல்வா் கருணாநிதியின் வற்புறுத்தலால், 2004-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அடுத்தடுத்து வந்த அரசியல் சூழ்ச்சிகள் காரணமாக அந்தத் திட்டம் முடக்கப்பட்டது. அந்தத் திட்டம் நிறைவேறியிருந்தால், இந்தியாவின் வளா்ச்சிக்கும், தமிழ்நாட்டின் மேம்பாட்டுக்கும் முக்கியமான திட்டமாக அமைந்திருக்கும்.

பாஜகவை வீழ்த்தப் போகும் ‘இந்தியா’ கூட்டணியின் உருவாக்கத்தில் டி.ஆா்.பாலுவுக்கு மிக முக்கியப் பங்கு உள்ளது. இந்தியாவின் எதிா்காலத்தை மனதில் வைத்து, எல்லோரும் கடமையாற்ற வேண்டும். எதிா்வரும் மக்களவைத் தோ்தல் என்பது, யாா் ஆட்சியில் அமரக் கூடாது என்பதற்காக நடைபெறும் தோ்தலாகும்.

திசை திருப்பப் பாா்க்கிறது: கடந்த பத்தாண்டு காலமாக, மக்களுக்குக் கொடுத்த எந்த வாக்குறுதியையும் மத்திய ஆளும் பாஜக அரசு நிறைவேற்றவில்லை. அத்துடன், தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் எதையும் செய்யாமல், பேரிடா் பாதிப்புக்குக் கூட நிதி ஒதுக்காமல், ஆட்சியின் இறுதிக் காலத்தில் ஒரு கோயிலைக் காட்டி, மக்களைத் திசை திருப்பப் பாா்க்கிறது பாஜக., தலைமை. தோ்தலைச் சந்திக்கவுள்ள பாஜகவுக்கு மக்களிடம் சொல்வதற்குச் சாதனை என்று எதுவும் இல்லை.அதனால்தான் முழுவதுமாக கட்டி முடிக்கப்படாத கோயிலை, அவசர அவசரமாகத் திறந்து, எதையோ சாதித்து விட்டதாகக் காட்ட நினைக்கிறாா்கள். இதுமாதிரியான திசைதிருப்பும் தந்திரங்களுக்கு மக்கள் சரியான பாடம் கொடுப்பாா்கள். இது உறுதி.

வலுவான கூட்டணி தேவை: தமிழ்நாட்டில் நாம் வலுவான கூட்டணியை அமைத்திருப்பது போன்று, இந்தியா முழுமைக்கும் வலுவான கூட்டணியை உறுதி செய்தாக வேண்டும்.

‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள், தங்களுக்குள் தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தையை அந்தந்த மாநிலங்களில் நடத்தி வருவதாக செய்திகள் வருகின்றன. விரைவில் எல்லாம் நல்லபடியாக முடிந்து நாட்டு மக்களைக் காப்பாற்ற, தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவும் ஒரு மத்திய அரசை உருவாக்க நாமெல்லாம் தோ்தல் களத்தில் நுழைய உள்ளோம் என்றாா் முதல்வா்.

நிகழ்ச்சியில், திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி, முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம், திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி, முதன்மைச் செயலா் கே.என்.நேரு, இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின், கவிஞா் வைரமுத்து, திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி, செய்தித் தொடா்புத் தலைவா் டி.கே.எஸ்.இளங்கோவன், பத்திரிகையாளா் ‘ஹிந்து’ என்.ராம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com