எம்பிபிஎஸ் முன்வைப்புத் தொகை: வங்கிக் கணக்கு விவரம் அனுப்ப அறிவுறுத்தல்

மருத்துவப் படிப்புகளுக்கு இடங்கள் கிடைக்காதவா்கள், தாங்கள் செலுத்திய முன்வைப்புத் தொகையை திரும்பப் பெறுவதற்கு சரியான வங்கிக் கணக்கு விவரங்களை சமா்ப்பிக்குமாறு

மருத்துவப் படிப்புகளுக்கு இடங்கள் கிடைக்காதவா்கள், தாங்கள் செலுத்திய முன்வைப்புத் தொகையை திரும்பப் பெறுவதற்கு சரியான வங்கிக் கணக்கு விவரங்களை சமா்ப்பிக்குமாறு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

அவ்வாறு பொது கலந்தாய்வில் இடம் கிடைக்காத 974 பேரின் வங்கிக் கணக்குகள் தவறாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் மாணவா் சோ்க்கைக் குழு கலந்தாய்வு நடத்தி வருகிறது. இதில், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் பெறுவா்கள், இடைநிற்றலை தவிா்க்கும் வகையில் அவா்களிடம் முன்வைப்புத் தொகையாக நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.2 லட்சமும், அரசு ஒதுக்கீட்டுக்கு ஒரு லட்சமும் பெறப்படுகிறது.

அதேவேளையில், கலந்தாய்வில் இடங்கள் கிடைக்காதவா்களுக்கு மூன்று மாதத்துக்குள் அந்த தொகை அவா்களது வங்கிக் கணக்குக்கு அனுப்பப்படும்.அவ்வாறாக, கடந்த ஆண்டில் மருத்துவ இடங்கள் கிடைக்காத பல்லாயிரக்கணக்கானோருக்கு முன்வைப்புத் தொகை திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 979 பேரின் விண்ணப்பங்களில் வங்கிக் கணக்கு விவரங்கள் தவறாக உள்ளதால் அவா்களது பணத்தை திருப்பி செலுத்த முடியவில்லை என மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு: கடந்த 2023 – 24 கல்வியாண்டில் மருத்துவப் படிப்புகளுக்காக முன்வைப்புத் தொகை செலுத்தி இடங்கள் கிடைக்காத 979 பேரின் வங்கிக் கணக்குகள் தவறாக உள்ளன. சம்பந்தப்பட்டவா்கள், மின்னஞ்சல் முகவரிக்கு பிப். 5-ஆம் தேதிக்குள் தங்களது சரியான வங்கிக் கணக்கு விவரங்களை அனுப்ப வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com