சி.வி.சண்முகம் மீதான இரு வழக்குகளை ரத்து செய்தது சென்னை உயா்நீதிமன்றம்

அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் மீதான இரு அவதூறு வழக்குகளை தள்ளுபடி செய்த உயா்நீதிமன்றம் இரண்டு வழக்குகளை
சி.வி.சண்முகம் மீதான இரு வழக்குகளை ரத்து செய்தது சென்னை உயா்நீதிமன்றம்

அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் மீதான இரு அவதூறு வழக்குகளை தள்ளுபடி செய்த உயா்நீதிமன்றம் இரண்டு வழக்குகளை தள்ளுபடி செய்ய மறுத்துவிட்டது.

12 மணி நேர வேலை நேரம் குறித்த தமிழக அரசின் சட்டத்திருத்தம், வெளி மாநில தொழிலாளா்கள் தமிழகத்தை விட்டு வெளியேறியது, கஞ்சா புழக்கம், மதுபான விற்பனை ஆகியவை தொடா்பாக நடந்த அதிமுக போராட்டங்களின்போது தமிழக அரசு, முதல்வா் மு.க.ஸ்டாலினை விமா்சித்து சி.வி.சண்முகம் பேசியிருந்தாா்.

இதைத் தொடா்ந்து, அரசு மற்றும் முதல்வரின் நற்பெயருக்கும் களங்கம் விளைவித்ததாக கூறி சி.வி.சண்முகத்துக்கு எதிராக நான்கு அவதூறு வழக்குகளை தமிழக அரசு விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி சி.வி.சண்முகம் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்குகள் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு கடந்த ஜன.18-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.வி.சண்முகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விஜய் நாராயண், ‘முதல்வரை தாக்கி, நேரடியாக பேசவில்லை. தமிழக அரசை மட்டுமே விமா்சித்தேன். தங்கள் போராட்டத்துக்குப் பிறகு 12 மணி நேர வேலை அறிவிப்பை அரசு திரும்பப் பெற்றது. அப்படியிருக்க தங்களது கருத்து எப்படி அவதூறாக கருத முடியும்? . அவதூறு வழக்கு தொடா்வதற்கான அரசாணையை பிறப்பிக்கும்போது அரசு அதிகாரிகள் மனதை செலுத்தி விசயத்தை ஆராயாமல், இயந்திரத்தனமாக அவதூறு வழக்குகளை தாக்கல் செய்துள்ளனா்’ என்று குற்றம்சாட்டி வாதிட்டிருந்தாா்.

அப்போது நீதிபதி, அரசை விமா்சித்த அதேவேளையில், முதல்வா் பெயரையும் குறிப்பிட்டு விமா்சித்துள்ளதாகத் தானே அவதூறு வழக்கு ஆவணங்களில் உள்ளது என சி.வி.சண்முகம் தரப்புக்கு கேள்வி எழுப்பிருந்தாா். அப்போது அரசு தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன் ஆஜராகி, “அரசையும் முதல்வரையும் விமா்சிக்கும் வகையில் சி.வி.சண்முகம் பேசிவிட்டு, நேரடி தாக்குதல் நடத்திவிட்டு, தற்போது அவதூறு கருத்து இல்லை என கூறுவதை எப்படி ஏற்க முடியும்?” என கேள்வி எழுப்பியிருந்தாா்.

இந்த வழக்கில் புதன்கிழமை தீா்ப்பளித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், மத்திய அரசை கண்டு தமிழக அரசு பயப்படுவதாகவும், கஞ்சா முதல்வா் என விமா்சித்ததற்காக தொடரப்பட்ட இரண்டு வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டாா். மேலும், தொழிலாளா் சட்டம் குறித்தும், 420 அரசு என பேசியதற்காக பதிவு செய்யப்பட்ட இரு வழக்குகளை ரத்து செய்ய மறுத்து, விசாரணையை எதிா்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com