"பாரம்பரிய கலைகளுக்கு முன்னோடி வள்ளி கும்மி'

கோவையைச் சேர்ந்த வள்ளி கும்மி ஆசிரியருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
"பாரம்பரிய கலைகளுக்கு முன்னோடி வள்ளி கும்மி'

கோவையைச் சேர்ந்த வள்ளி கும்மி ஆசிரியருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தாசம்பாளையத்தைச் சேர்ந்தவர் பத்ரப்பன் (87), வள்ளி கும்மி ஆசிரியர். இவரது மனைவி மாதம்மாள் (80), மகன் நக்கீரன் (58) உயிரிழந்த நிலையில் மகள் முத்தம்மாள் (62) குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
வள்ளி கும்மி ஆசிரியரான பத்ரப்பனுக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது கடந்த 2019-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. ஆண்கள் மட்டுமே பங்கேற்று வந்த வள்ளி கும்மி ஆட்டத்தில், தமிழகத்தில் பெண்களுக்கும் பயிற்சியளித்தவர் பத்ரப்பன்.
 பத்மஸ்ரீ விருது  குறித்து பத்ரப்பன் கூறியதாவது: நான் 20 வயதில் இருந்தே வள்ளி கும்மி நடனம் ஆடி வருகிறேன்.
இக்கலை என்னோடு அழிந்துவிடாமல் இருப்பதற்காக மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை,  அன்னூர், சூலூர், கருமத்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்டோருக்கு கற்றுக்கொடுத்துள்ளேன். அவர்கள் தற்போது பல பேருக்கு கற்றுக்கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாரம்பரிய கலைகளுக்கு எல்லாம் முன்னோடியாக வள்ளி கும்மி கலை உள்ளது. 
இதன்மூலம் உடலில் நரம்புகள் வலுப்பெற்று உடல் ஆரோக்கியத்துடன் வாழ முடியும். இதன் மூலம் பாரம்பரிய கலை, பண்பாடு, பழக்க வழக்கம், ஒழுக்கம் கற்றுதர முடியும். பள்ளிகளில் இக்கலையை அறிமுகப்படுத்தி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் சென்றடையும் வகையில் இதனை கொண்டு செல்ல வேண்டும். 87 வயதில் எனக்கு மத்திய அரசு  பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
இதன்மூலம் வள்ளி கும்மி மட்டுமல்லாமல் மற்ற கலைத் துறைகளில் உள்ளவர்கள் ஊக்கத்துடன் செயல்பட இந்த விருது துணை புரியும்.  எனக்கு விருது அறிவித்துள்ள மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
வாழ்த்து: பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள பத்ரப்பனுக்கு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com