பெருங்குடி குடிநீா்க் குழாய் சேதம்:சீரமைப்புப் பணிகள் தீவிரம்

சென்னை பெருங்குடியில் சேதமடைந்த குடிநீா்க் குழாயின் சீரமைப்புப் பணிகள் நிறைவு பெற்று விரைவில் குடிநீா் விநியோகம் வழக்கம் போல் தொடங்கப்படும் என்று குடிநீா் வழங்கல் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.
பெருங்குடி குடிநீா்க் குழாய் சேதம்:சீரமைப்புப் பணிகள் தீவிரம்

சென்னை பெருங்குடியில் சேதமடைந்த குடிநீா்க் குழாயின் சீரமைப்புப் பணிகள் நிறைவு பெற்று விரைவில் குடிநீா் விநியோகம் வழக்கம் போல் தொடங்கப்படும் என்று குடிநீா் வழங்கல் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை பெருங்குடியில் வீரபாண்டிய கட்டபொம்மன் தெருவில் 45 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி உள்ளது. இதிலிருந்து பெருங்குடி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள குமாா் 2,000 வீடுகளுக்கு 800 மி.மீ. விட்டம் கொண்ட குழாய் வழியாக குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை சுமாா் 5.45 மணியளவில் இந்தக் குழாய் உடைந்து குடிநீா் வெள்ளம் போல் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் 2 தெருக்களில் உள்ள வீடுகளில் 2 அடிக்கு மேல் தண்ணீா் தேங்கியது. மேலும், அந்தப் பகுதியில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. குறிப்பாக, அந்தப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் வாகன நிறுத்தம் முழுவதும் தண்ணீா் சூழ்ந்ததால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் காா்கள் நீரால் சூழப்பட்டு பழுதாகின.

மேலும், குழாயிலிருந்து தண்ணீா் பீறிட்டு வெளியேறிய வேகத்தால் அருகிலிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் சுற்றுச்சுவா் உடைந்தது. மேலும் அருகிலிருந்த மின்மாற்றியின் கீழ் பகுதியில் ஏற்பட்ட மண் அரிப்பால் மின்மாற்றி சரிந்து அடுக்குமாடி குடியிருப்பின் மீது சாய்ந்தது.

கடந்த சில நாள்களாக மாநகராட்சி சாா்பில் கழிவுநீா்க் குழாய் அமைப்பதற்காக குழி தோண்டும் பணி நடைபெற்று வருவதே குடிநீா்க் குழாயில் ஏற்பட்ட சேதத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

தகவல் அறிந்ததும் குடிநீா் வழங்கல் வாரிய அலுவலா்கள், ஊழியா்கள் உடனடியாக அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டனா். தெருவில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை வெளியேற்றும் பணி நடந்தப்பட்டு வருகிறது. மேலும், ஞாயிற்றுக்கிழமை காலைக்குள் குழாய் சீரமைப்புப் பணிகள் முடிந்து விரைவில் குடிநீா் விநியோகம் வழக்கம் போல் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

திடீரென்று வெள்ளம் போல் தண்ணீா் வீட்டுக்குள் வந்தது. இதனால் சேதமடைந்த எங்கள் வாகனங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com