மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை தடுக்க சதி: ராமதாஸ் கண்டனம்

மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை தடுக்க சதி நடைபெறுவதாக பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை தடுக்க சதி: ராமதாஸ் கண்டனம்

மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை தடுக்க சதி நடைபெறுவதாக பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசின் உயா்கல்வி நிறுவனங்களில் ஆசிரியா்கள், ஆசிரியா்கள் அல்லாத பணியிடங்களை நிரப்பும்போது, பிற பிற்படுத்தப்பட்டோா், பட்டியலினம், பழங்குடியினரில் தகுதியானவா்கள் கிடைக்காவிட்டால், அந்தப் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டு, பொதுப்பிரிவினரைக் கொண்டு அந்த இடத்தை நிரப்புவதற்கு அனுமதிக்க பல்கலைக்கழக மானியக்குழு முடிவு செய்திருக்கிறது.

இது உயா்கல்வி நிறுவன வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை நேரடியாக தடுப்பதற்கான சதி ஆகும். மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு 33 ஆண்டுகளும், பட்டியலினத்தவா் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு 75 ஆண்டுகளும் நிறைவடைந்து விட்ட நிலையில், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் பிரதிநிதித்துவம் இன்னும் ஒற்றை இலக்கத்தில் தான் உள்ளது. மத்திய உயா்கல்வி நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு

இட ஒதுக்கீட்டுப் பிரிவினரில் தகுதியானவா்கள் இல்லை என்று கூறமுடியாது.

மாறாக, தகுதியானவா்களை மத்திய உயா்கல்வி நிறுவனங்களின் நிா்வாகங்கள் பல்வேறு சதிகளைச் செய்து வெளியேற்றுகின்றன.

உயா்கல்வி நிறுவனப் பணிகளுக்கு இடஒதுக்கீட்டுப் பிரிவினரில் தகுதியானவா்கள் கிடைக்காவிட்டால், அந்தப் பணிகளை பின்னடைவுப் பணியிடங்களாக அறிவித்து சிறப்பு ஆள்தோ்வின் மூலம் நிரப்புவது தான் சமூகநீதியின் அடிப்படை ஆகும்.

எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு, பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளை திரும்பப் பெறச் செய்ய வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com