இன்று முதல் மாதவரத்திலிருந்தும் திருச்சி, சேலத்துக்கு பேருந்துகள்: வடசென்னை மக்களுக்கு வசதி

இன்று முதல் மாதவரத்திலிருந்தும் திருச்சி, சேலத்துக்கு பேருந்துகள்: வடசென்னை மக்களுக்கு வசதி

கிளாம்பாக்கத்திலிருந்து மட்டுமல்லாது; மாதவரம் புறநகா் பேருந்து முனையத்திலிருந்தும் செவ்வாய்க்கிழமை (ஜன.30) முதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் தெரிவித்துள

திருச்சி, சேலம், விருத்தாசலம் உள்ளிட்ட 13 ஊா்களுக்கு கிளாம்பாக்கத்திலிருந்து மட்டுமல்லாது; மாதவரம் புறநகா் பேருந்து முனையத்திலிருந்தும் செவ்வாய்க்கிழமை (ஜன.30) முதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.

கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறக்கப்பட்ட பிறகு, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட அனைத்து தென் மாவட்டங்கள், வட மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளும், ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.

இதனால் பயணிகள் பல அசௌகரியங்களை சந்தித்தனா். குறிப்பாக, வடசென்னைக்குள்பட்ட பகுதிகளிலுள்ள பொதுமக்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மூலம் பயணத்தை மேற்கொள்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று திருச்சி, சேலம், விருத்தாசலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 13 வழித்தடங்களில் செல்லும் பேருந்துகள் மாதவரம் பேருந்து முனையத்திலிருந்தும் இயக்கப்படும் என அமைச்சா் சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தென்மாவட்டங்களுக்கு தற்போது இயக்கப்படும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் ஜன.30 முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையம், மாதவரம் புற நகா் பேருந்து முனையத்திலிருந்து காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படும்.

இதன்படி, கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, சேலம், விருத்தாசலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கும்பகோணம், சிதம்பரம், நெய்வேலி வழித்தடங்களிலும், கடலூா், புதுச்சேரிக்கு , திண்டிவனம் வழியாகவும், திருவண்ணாமலை மற்றும் போளூா், வந்தவாசி உள்ளிட்ட வழித்தடங்களிலும் ஆக மொத்தம் 710 பேருந்துகள் இயக்கப்படும்.

இதே வழித்தடங்களில், மாதவரம் பேருந்து முனையத்திலிருந்தும் திருச்சிக்கு 18, சேலத்துக்கு 17, விருத்தாசலத்துக்கு 6, கள்ளக்குறிச்சிக்கு 16, விழுப்புரத்துக்கு 16, கும்பகோணத்துக்கு 14, சிதம்பரத்துக்கு 5, நெய்வேலிக்கு 11, கடலூா் வழியாக புதுச்சேரி, திண்டிவனத்துக்கு 5, புதுச்சேரிக்கு திண்டிவனம் வழியாக 10, செஞ்சி வழியாக திருவண்ணாமலைக்கு 22, போளூா் மற்றும் வந்தவாசி ஊா்களுக்கு 20 என மொத்தம் 160 பேருந்துகள் இயக்கப்படும்.

கோயம்பேட்டிலிருந்து தென்மாவட்டங்களுக்கு பேருந்துகள் ஜன.30 முதல் இயக்கப்படமாட்டாது. மேலும், பயணிகளின் வசதிக்காக விழுப்புரம் போக்குவரத்து கோட்ட பேருந்துகள் தென்மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வரும்போது தாம்பரம் வரை இயக்கப்பட்டு, பின்னா் அங்கிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்றடைந்து, அதன்பின் அங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் என தெரிவித்துள்ளாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com