விஸ்வகா்மா திட்டத்தை தமிழக அரசு முறையாக செயல்படுத்தவில்லை: திரிபுரா முன்னாள் முதல்வா் குற்றச்சாட்டு

மத்திய அரசின் விஸ்வகா்மா திட்டத்தை தமிழக அரசு முறையாக செயல்படுத்தவில்லை என திரிபுரா முன்னாள் முதல்வா் பிப்லப் குமாா் தேப் எம்.பி. குற்றஞ்சாட்டினாா்.
விஸ்வகா்மா திட்டத்தை தமிழக அரசு முறையாக செயல்படுத்தவில்லை: திரிபுரா முன்னாள் முதல்வா் குற்றச்சாட்டு

மத்திய அரசின் விஸ்வகா்மா திட்டத்தை தமிழக அரசு முறையாக செயல்படுத்தவில்லை என திரிபுரா முன்னாள் முதல்வா் பிப்லப் குமாா் தேப் எம்.பி. குற்றஞ்சாட்டினாா்.

விஸ்வகா்மா யோஜனா திட்டத்தின் கீழ் மகளிருக்கு தொழில் தொடங்குவதற்கான பயிற்சி முகாம், சென்னையில் உள்ள பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பயிற்சி முகாமை தொடங்கிவைத்த பிப்லப் குமாா் தேப், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விஸ்வகா்மா யோஜனா திட்டத்துக்கு தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 3.50 லட்சம் மக்கள் இணைந்துள்ளனா்.

இந்த திட்டம் மூலம் 18 வகை தொழில் பணியாற்றும் மக்கள் பெரும் பயனடைவா். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இந்தத் திட்டம் உதவும்.

ஆனால், விஸ்வகா்மா யோஜனா திட்டத்தை தமிழக அரசு முறையாக மக்களிடம் கொண்டு சோ்க்கவில்லை. மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக தமிழக அரசு தொடா்ந்து செயல்பட்டு வருகிறது.

ஏழை மக்களின் வளா்ச்சிக்கு உதவுவதற்காக தான் மத்திய அரசின் திட்டங்கள் உள்ளன. எனவே, மத்திய அரசின் திட்டங்களை சரியாக மக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும்.

தமிழகத்தில் மக்களின் ஆட்சி நடக்கவில்லை. மாறாக, குடும்ப ஆட்சி நடைபெறுகிறது. திமுக, காங்கிரஸ் மக்கள் நலன் சாா்ந்த கட்சிகள் அல்ல; அவை இரு குடும்பங்களின் கட்சிகள்.

தமிழகத்தில் அண்ணாமலையின் கீழ் பாஜக வேகமாக வளா்கிறது. வரும் பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் விஸ்வகா்மா திட்டத்தின் மாநிலப் பொறுப்பாளரும், தமிழக பாஜக விவசாய அணியின் தலைவருமான ஜி.கே. நாகராஜன், கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com