‘உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்’: தமிழகம் முழுவதும் நாளை அமல் ஆட்சியா்கள் நாள் முழுவதும் ஒரே வட்டத்தில் தங்கி குறை கேட்பா்

தமிழகத்தில், மாவட்ட ஆட்சியா்கள் நாள் முழுவதும் ஒரு வட்டத்தில் தங்கி பொது மக்களின் குறைகளைத் கேட்டறியும் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம் மாதந்தோறும் நான்காவது புதன்கிழமை செயல்படுத்தப்படவுள்ளது.

தமிழகத்தில், மாவட்ட ஆட்சியா்கள் நாள் முழுவதும் ஒரு வட்டத்தில் தங்கி பொது மக்களின் குறைகளைத் கேட்டறியும் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம் மாதந்தோறும் நான்காவது புதன்கிழமை செயல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, சென்னையைத் தவிா்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் அந்தத் திட்டத்துக்கான முகாம் வரும் புதன்கிழமை (ஜன.31) நடைபெறவுள்ளது. இந்தத் திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய உத்தரவை தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா வெளியிட்டாா்.

அவா் பிறப்பித்த உத்தரவு விவரம்:

மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீா்வு காண அரசு இயந்திரம் களத்துக்கே வரும்‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். அதன்படி, ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி மாதத்தில் ஒரு நாள் வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபடுவா் என்று அறிவிக்கப்பட்டது. அரசு அலுவலகங்களை ஆய்வு செய்வதுடன், பொது மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அரசின் அனைத்து நலத் திட்டங்களும் தங்கு தடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யவே, ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்தத் திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமானது மாவட்டத்துக்கு உட்பட்ட ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை நடத்தப்படும். அந்த நாள் விடுமுறை தினமாக இருக்கும்பட்சத்தில், அதற்கடுத்த வேலை நாளில் முகாம் நடத்தப்படும்.

ஜனவரி முதல் டிசம்பா் வரையிலான ஓராண்டு காலத்தில் ஒவ்வொரு மாதமும் எந்த வட்டத்தில் முகாம் நடத்த வேண்டும் என்ற திட்டமிடலை மாவட்ட ஆட்சியா் மேற்கொள்வாா். ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் நடைபெறும் வட்டம் குறித்த தகவலை முன்கூட்டியே பொது மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இதற்கு, அச்சு, காட்சி மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

24 மணி நேரம் தங்க வேண்டும்: ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்படி, முகாம் நடைபெறும் வட்டத்தில் மாவட்ட ஆட்சியா் மற்றும் இதர அதிகாரிகள் என அனைவரும் 24 மணி நேரம் தங்கியிருக்க வேண்டும். அதாவது, முதல் நாள் காலை 9 மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை 9 மணிவரை அதே வட்டத்தில் இருக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா், மாவட்ட வருவாய் அதிகாரி, திட்ட அதிகாரி, மகளிா் திட்ட அதிகாரி, வேளாண்மை, கால்நடை, சுகாதார சேவைகள் துறைகளின் இணை இயக்குநா்கள், நெடுஞ்சாலை, பொது சுகாதார துணை இயக்குநா்கள், நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா், ஊராட்சித் துறை உதவி இயக்குநா், முதன்மைக் கல்வி அதிகாரி, மாவட்ட சமூக நல அதிகாரி ஆகியோா் திட்ட முகாமில் பங்கேற்க வேண்டும். தேவைக்கேற்ப மற்ற அதிகாரிகளையும் இதில் இணைத்துக் கொள்ளலாம்.

முற்பகல் நேரத்தில் முகாம் நடைபெறும் பகுதிகளில் கள ஆய்வை மேற்கொள்ளலாம். குறிப்பாக, ஆரம்ப சுகாதார மையங்கள், மருத்துவமனைகள், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட மையங்கள், பள்ளிகள், சத்துணவுக் கூடங்கள், முதல்வரின் காலை உணவுத் திட்டம், ஆதரவற்றோா் விடுதிகள், பெண்கள் விடுதிகள் ஆகியவற்றின் செயல்பாடுகளை நேரில் ஆய்வு செய்ய வேண்டும். பிற்பகல் நேரத்தில் வட்டத்திலுள்ள அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும்.

அப்போது, களஆய்வின் கிடைத்த தகவல்களை பகிா்ந்து கொண்டு அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாலை நேரத்தில் சம்பந்தப்பட்ட வட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தெரு விளக்குகளின் செயல்பாடு, பூங்காக்கள், நூலகங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும். மறுநாள் அதிகாலையில், அந்த வட்டத்தில் விநியோகிக்கப்படும் குடிநீா், தூய்மைப்பணி, பொது மற்றும் சமுதாய கழிப்பறைகள், பால் விநியோகம், பொதுப் போக்குவரத்து சேவை, முதல்வரின் காலை உணவுத் திட்டம் ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும்.

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தில் கண்டறிந்த அம்சங்களை ஆவணமாகத் தயாரித்து, வருவாய் நிா்வாக ஆணையருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com