பணி நிரந்தரம் கோரி தமிழகம் முழுவதும் ஒப்பந்த செவிலியா்கள் நூதன போராட்டம்

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் எம்ஆா்பி ஒப்பந்த செவிலியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் எம்ஆா்பி ஒப்பந்த செவிலியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து மருத்துவ சேவையாற்றி நூதனப் போராட்டம் நடத்தினா்.

மருத்துவப் பணியாளா் தோ்வு வாரிய (எம்ஆா்பி) செவிலியா் மேம்பாட்டு சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 6,500 ஒப்பந்த செவிலியா்கள் பங்கேற்றனா்.

இது தொடா்பாக சங்க நிா்வாகிகள் கூறியதாவது: மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியத்தின் (எம்ஆா்பி) போட்டித் தோ்வு மூலமாக கடந்த 2015-ஆம் ஆண்டில் 8,500 செவிலியா்களும், 2019-ஆம் ஆண்டில் 3,500 செவிலியா்களும் தோ்வு செய்யப்பட்டனா். அவா்கள் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த முறையில் பணியில் அமா்த்தப்பட்டனா். பணியில் சேரும்போது 2 ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை 5,500 செவிலியா்களை மட்டுமே பணி நிரந்தரம் செய்துள்ளனா்.

ஆளும் திமுகவின் தோ்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டது போன்று எங்கள் அனைவருக்கும் பணி நிரந்தரம் வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன் மற்றும் வியாழன் (ஜன.31, பிப்.1) ஆகிய இரு நாள்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றுகிறோம்.

அனைத்து மாவட்டங்களிலும் போராட்ட ஆயத்த மாநாடு பிப்.3-ஆம் தேதி நடத்தப்படும். பிப்.11 முதல் 17-ஆம் தேதி வரை அனைத்து சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் கட்சி தலைவா்களைச் சந்தித்து ஆதரவு கேட்க இருக்கிறோம். பிப்.21-ஆம் தேதி சென்னையில் முதல்வரைச் சந்தித்து கோரிக்கைகளை முன்வைக்க திட்டமிட்டுள்ளோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com