எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

பாதுகாப்பான பேருந்து பயணம்: அரசுக்கு இபிஎஸ் கோரிக்கை

மாநகரப் பேருந்து எரிந்தது: பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறி

பேருந்துகளில் பயணிகள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னை அடையாறு எல்.பி.சாலையில் மாநகரப் பேருந்து எரிந்ததாக செய்திகள் வந்துள்ளன. பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவகையில் சமயோசிதமாகச் செயல்பட்ட பேருந்து ஓட்டுநருக்கும் நடத்துநருக்கும் பாராட்டுகள்.

திமுக ஆட்சியில் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படாதது குறித்தும், முறையான பராமரிப்பு இல்லாமல் இயங்கும் பழுதடைந்த பேருந்துகள் குறித்தும் தொடா்ச்சியாக நான் சுட்டிக்காட்டி வந்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இதுபோன்று மக்கள் உயிருக்கே ஆபத்தான விபத்துகள் ஏற்பட காரணமாக இருக்கும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

அரசுப் பேருந்துகளில் நம்பி பயணிக்கும் பொதுமக்களின் உயிரோடு விளையாடாமல், பயன்பாட்டில் இருக்கும் பேருந்துகளுக்கு தர ஆய்வு நடத்தியும், இனியாவது புதிய பேருந்துகளை கொள்முதல் செய்தும் பாதுகாப்பான பயணத்தை திமுக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com