கோவை, நெல்லை திமுக மேயர்கள் திடீர் ராஜிநாமா

கோவை, நெல்லை மேயர்கள் திடீர் ராஜிநாமா: காரணம் என்ன?
கோவை, நெல்லை திமுக மேயர்கள் திடீர் ராஜிநாமா

கோவை, நெல்லை மாநகராட்சிகளின் திமுக மேயர்கள் தங்களது பதவியை புதன்கிழமை திடீரென ராஜிநாமா செய்தனர்.

கோவை மாநகராட்சி மேயர் கல்பனா. திமுகவை சேர்ந்த இவரை செவ்வாய்க்கிழமை சென்னைக்கு அழைத்த கட்சி மேலிடம் பதவியை ராஜிநாமா செய்யும்படி உத்தரவிட்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில், மேயர் கல்பனாவின் சார்பில் அவரது ஆதரவாளர் ஒருவர் மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரனிடம் புதன்கிழமை கடிதம் வழங்கினார். அந்தக் கடிதத்தில், உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தால் மேயர் பொறுப்பில் இருந்து ராஜிநாமா செய்வதாக கல்பனா குறிப்பிட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள மாநகராட்சி ஆணையர், அவரது கடிதத்தை ஏற்றுக் கொண்டிருப்பதாகக் கூறினார்.

இதைத் தொடர்ந்து, மேயர் கல்பனாவின் ராஜிநாமாவுக்கு ஒப்புதல் அளிக்க, மாநகராட்சியின் சிறப்புக் கூட்டம் திங்கள்கிழமை (ஜூலை 8) நடைபெறும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காரணம் என்ன?: கடந்த 2022-ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சியை திமுக கைப்பற்றியதும் மேயர் பொறுப்புக்கு யாரும் எதிர்பாராதவிதமாக கல்பனா தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜியின் பரிந்துரையின்பேரில் கல்பனா மேயரானதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

கோவையின் முதல் பெண் மேயராகப் பொறுப்பேற்ற கல்பனாவுக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தவரை ஒத்துழைப்பு வழங்கி வந்த மண்டலத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், அவர் சிறைக்குச் சென்றபிறகு மேயரின் நடவடிக்கைகளை விமர்சிக்கத் தொடங்கினர்.

கோவைக்கு வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்ய வந்த அமைச்சர்களிடம் மேயர் மீது வார்டு கவுன்சிலர்கள், மண்டலத் தலைவர்கள் புகார்கள் தெரிவிப்பதும் அதிகரித்தது. இந்நிலையில், கல்பனா தனது மேயர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

நெல்லை மேயர்: திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன். திமுகவை சேர்ந்த இவருக்கும், மாமன்ற திமுக உறுப்பினர்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதத்தில் மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால், கட்சித் தலைமையின் உத்தரவால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நடைபெற்ற கூட்டத்தை திமுகவினர் புறக்கணித்தனர். அதன்பின்பும் இரு தரப்பினருக்கும் சுமுகமான நிலை ஏற்படவில்லை.

இந்நிலையில், கடந்த ஜூன் 28-ஆம் தேதி நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் 10 பேர் மட்டுமே பங்கேற்றனர். திமுக கூட்டணி மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்காததோடு, மேயர் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தி துண்டுப் பிரசுரமும் விநியோகித்தனர்.

இதுதொடர்பாக திமுக தலைமை, மேயர் சரவணனை சென்னைக்கு செவ்வாய்க்கிழமை நேரில் அழைத்து விளக்கம் கேட்டது.

இந்நிலையில், மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவிடம் மேயர் சரவணன் தனது ராஜிநாமா கடிதத்தை புதன்கிழமை அளித்தார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் கூறுகையில், மேயர் பி.எம்.சரவணன் குடும்பச் சூழல் காரணமாக தனது பதவியை ராஜிநாமா செய்வதாகக் கூறி கடிதம் அளித்துள்ளார். ஆனால், மாமன்ற உறுப்பினராக வழக்கம்போல் செயல்படுவார். இந்தக் கடிதம் குறித்து மாமன்ற உறுப்பினர்களிடம் தெரிவிக்கும் வகையில், மாமன்ற கூட்டம் ஜூலை 8-ஆம் தேதி துணை மேயர் கே.ஆர்.ராஜு தலைமையில் நடைபெற உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com