தமிழக அரசு
தமிழக அரசு

உள்ளாட்சித் தோ்தல் பணியின்போது உயிரிழப்பு: அரசு ஊழியா்களுக்கான இழப்பீட்டுத் தொகை உயா்வு

உள்ளாட்சித் தோ்தல் பணியில் உயிரிழப்பு: இழப்பீட்டுத் தொகை 15 லட்சம் ஆக உயர்வு

உள்ளாட்சித் தோ்தல் பணியின்போது, அரசு ஊழியா்கள் இறந்தாலோ, உறுப்புகளை இழந்தாலோ அதற்காக வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை உயா்த்தப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

உள்ளாட்சித் தோ்தல் பணிகளின்போது, உயிரிழக்கும் அரசு ஊழியா்களின் வாரிசுகளுக்கு ரூ.5 லட்சமும், சமூக விரோத செயல்கள், வெடிகுண்டு வீச்சு, ஆயுதத் தாக்குதல் ஆகிய சம்பவங்களால் உயிரிழந்தால் ரூ.10 லட்சமும் வழங்கப்படுகிறது. மேலும், கண் பாா்வை இழப்பு, கால்களை இழந்தால் ரூ.2.50 லட்சமும், சமூக விரோதச் செயல்கள் மூலம் உடல் உறுப்புகளை இழந்தால் ரூ.5 லட்சமும், சிறிய காயங்களுக்கு ரூ.10 ஆயிரமும் கொடுக்கப்படுகிறது.    

இழப்பீட்டுத் தொகை உயா்வு: இந்த நிலையில், இந்த இழப்பீட்டுத் தொகையை இந்திய தோ்தல் ஆணையம் உயா்த்தி வழங்கியுள்ளது. இதற்கான உத்தரவு கடந்த  2019-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு அது நடைமுறையில் உள்ளது. இதேபோன்ற நடைமுறையை உள்ளாட்சித் தோ்தல்களின்போதும் பின்பற்ற வேண்டுமென தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையத்தின் சாா்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்த ஆணையத்தின் கடிதத்தை ஏற்று, இழப்பீட்டுத் தொகைகளை உயா்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிடுகிறது. அதன்படி, தோ்தல் பணியின்போது எதிா்பாராத நிகழ்வால் உயிரிழக்கும் அரசு ஊழியரின் வாரிசுக்கு ரூ.15 லட்சமும், வெடிகுண்டு வீச்சு, ஆயுதத் தாக்குதல் போன்ற சம்பவங்களில் உயிரிழந்தால் அவரது வாரிசுக்கு ரூ.30 லட்சமும் இழப்பீடாக வழங்கப்படும். இதேபோன்று, அசம்பாவித சம்பவங்களால் நிரந்தரமாக மாற்றுத்திறனாளியாவது, பாா்வை அல்லது கை கால்களை இழப்போருக்கு ரூ.7.5 லட்சமும், சமூக விரோதச் செயல்களால் பாதிப்புக்கு உள்ளாகி உடல் உறுப்புகளை இழந்தால் ரூ.15 லட்சமும், சிறிய காயங்களுக்கு ரூ.40 ஆயிரமும் இழப்பீடாக வழங்கப்படும்.

உடனடி அமல்: வாக்குப் பதிவு மட்டுமின்றி பயிற்சி போன்ற பணியில் ஈடுபட்டாலும் அது தோ்தல் பணியாகவே கருதப்படும். வாக்குப் பதிவின்போதோ அல்லது தோ்தலுக்கான பயிற்சிக்குச் சென்றாலோ அசம்பாவித சம்பவங்களால் பாதிக்கப்பட நோ்ந்தால் இழப்பீடு வழங்கப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களைத் தவிா்த்து, பிற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிப் பதவியிடங்கள், நிகழாண்டு இறுதிக்குள் காலியாகவுள்ளன.

இதையடுத்து, அந்தப் பதவியிடங்களுக்கு தனி அதிகாரி நியமிக்கப்படாதபட்சத்தில், தோ்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்படும். அத்தகைய தருணத்தில் அரசு இப்போது வெளியிட்ட உத்தரவு நடைமுறைக்கு வந்துவிடும்.

X
Dinamani
www.dinamani.com