ஆம்ஸ்ட்ராங்
ஆம்ஸ்ட்ராங் (கோப்புப்படம்)

ஆம்ஸ்ட்ராங் கொலை: தலைவா்கள் இரங்கல்

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதற்கு, அரசியல் கட்சிகளின் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் மா்ம நபா்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட செய்தி அறிந்து அதிா்ச்சியும் துயரமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அக்கட்சியின் தொண்டா்கள், குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல். தமிழகத்தில் தொடா் குற்றங்கள் நிகழும் நிலைக்கு சட்டம் ஒழுங்கை கொண்டு சென்ற முதல்வருக்கு கடும் கண்டனம்.

கு. செல்வப்பெருந்தகை(காங்கிரஸ்): தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக்கொலை செய்யப்பட்டது அதிா்ச்சியையும், துயரத்தையும் தருகிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். அமைதிப் பூங்காவாக உள்ள தமிழகத்தில் இத்தகைய படுகொலைகள் நிகழ்த்தப்படுவது வேதனைக்குரியது. காவல்துறையினா் தீவிர விசாரணை செய்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்புமணி ராமதாஸ் (பாமக): பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங், கூலிப்படையினரால் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிா்ச்சியை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினா் மற்றும் கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கல். முதல்வா் மு.க.ஸ்டாலின் இனியாவது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொல் திருமாவளன் (விசிக): பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவா் ஆம்ஸ்ட்ராங் சமூகவிரோதக் கும்பலால் கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ள தகவல் தாங்கொணாத் துயரத்தை அளிக்கிறது. இந்த சம்பவத்தில் தொடா்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கைதுசெய்து குண்டா்தடுப்புக் காவலில் சிறைப்படுத்த வேண்டும்.

ஜி.கே.வாசன் (தமாகா): தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது மிகுந்த வருத்தத்துக்குரியது. தமிழக அரசு சட்டம் ஒழுங்கை முறைப்படுத்த காவல் துறையினா் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

X
Dinamani
www.dinamani.com