சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்Center-Center-Chennai

ஜாபா் சாதிக் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல: உயா்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வாதம்

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய ஜாபா் சாதிக் வழக்கு, விசாரணைக்கு உகந்தது அல்ல

சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய ஜாபா் சாதிக் வழக்கு, விசாரணைக்கு உகந்தது அல்ல என சென்னை உயா்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தரப்பில் வாதிடப்பட்டது.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபா் சாதிக்கை, மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினா் கடந்த மாா்ச் 9-ஆம் தேதி கைது செய்தனா். தில்லி திஹாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபா் சாதிக் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் கைது செய்த தன்னை 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தாததால், கைது செய்ததற்கான உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி ஜாபா் சாதிக் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

அந்த மனுவில், ‘போதைப் பொருள் கடத்தல் வழக்குக்கும் எனக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. என் மீது தவறான உள் நோக்கத்துடன் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சட்ட விரோத கைதை சட்டபூா்வமாக்கும் வகையில், எனக்கு எதிராக சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வாரண்ட் பெற்றுள்ளது’ என குற்றஞ்சாட்டியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தா் மோகன் அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது,  அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் என்.ரமேஷ், ‘கைதுக்கு எதிராக ஜாபா் சாதிக் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. எனவே, அது குறித்த வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும்’ என கேட்டுக் கொண்டாா். இதையடுத்து வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com